ஹிஜாப் அணிந்து வந்த அரபி டீச்சர்.. இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

admin
Aug 20, 2023,01:44 PM IST
திருவண்ணாமலை: ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த அரபி டீச்சரை ஹிஜாப் அணிய கூடாது என்று கூறி வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று  மத்யமா இந்தி தேர்வு நடைபெற்றது. தென்னிந்திய இந்தி பிரச்சார சபை நடத்தும் தேர்வு இது. இதில் காலை முதல் தாள் தேர்வு நடைபெற்றது. பிற்பகலில் 2வது தாள் பரீட்சை நடைபெற்றது.



இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் எழுதினர். அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஷபானா என்ற அரபி டீச்சரும் தேர்வு எழுத தனக்கு ஒதுக்கப்பட்ட, கோமாசிபட்டியில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திற்கு வந்தார். தேர்வு அறைக்குள் அவரை அனுமதித்த தேர்வு அதிகாரிகள், தேர்வு ஆரம்பித்த 10 நிமிடத்தில் அவரிடம் வந்து அவர் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றக் கூறியுள்ளனர்.

அதற்கு ஷபானா, இது எனது மத அடையாளம். இதை எப்படி அகற்ற முடியும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் ஹிபாபுடன் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக  கூறிய அதிகாரகிள், ஷபாஆவை தேர்வறையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஷபானா அதிர்ச்சி அடைந்தார். அவருடன் தேர்வு வளாகத்திற்கு வந்திருந்த அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்துத் தகவல் கிடைத்ததும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு மையத்திற்குத் திரண்டு வந்து தேர்வு மையத்திற்கு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.