4 மாவட்டங்களில் நாளை.. கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு... ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் கன முதல் மிக மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. அனேக இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது.
இந்த நிலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை கன முதல் மிக கனமழை:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
12.3.2025 கனமழை:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வெயில் நிலவரம்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும், 12.3.2025 முதல் 14.3.2025 வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். ஒரு சில இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.