இந்தியாவில்.. ஒரு பக்கம் கனமழை எச்சரிக்கை.. மறுபக்கம் கடும் வறட்சி.. கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
டில்லி : நாட்டின் ஒரு சில மாநிலங்களில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதே சமயம் மற்றொரு புறம் வறட்சி, தண்ணீர் கட்டுப்பாடு ஆகியனவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்.
மகாராஷ்டிவின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், இன்னும் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் ஆகிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கேரளாவிலும் ஜூன் 9 ம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இங்கெல்லாம் தென் மேற்குப் பருவ மழை சீசன் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் வறட்சி
அதே சமயம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தூரத்தில் இருக்கும் கிணறுகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் சேகரித்து வருகின்றனர். கிணறுகளும் கடுமையாக வறண்டு போய், சிறு குட்டை போல் மிக குறைந்த அளவிலான தண்ணீரே தேங்கி உள்ளன.
தலைநகர் டில்லியிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வண்டிகள் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீரை பெரிய கேன்களில் நீண்ட வரிசையில் நின்று பிடித்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இப்படி இந்தியாவில் ஒரு பக்கம் அதீத மழையும், இன்னொரு பக்கம் குடிநீருக்கே வழி இல்லாத கடும் வறட்சியும் நிலவி வருவது மக்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூழலியல் மாற்றத்தால் ஏற்படும் இதுபோன்ற சூழலை சமாளிக்க பொதுமக்களும் காலநிலை மாற்ற அபாயத்தை உணர்ந்து அதற்குத் தேவையான மாற்றங்களுக்குப் பழக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.