2 நாட்களுக்கு குடையை எடுத்து ரெடியா வச்சுக்கோங்க... கனமழை பெய்யுமாம்.. வானிலை மையம் தகவல்

Meenakshi
Jun 22, 2024,06:19 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு  திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 26 வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 




இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 25ம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, பகுதிகளிலும் மிதமதன மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.


மேலும் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.