குடையோடு போங்க மக்களே.. தமிழ்நாட்டில் பிப் 27,28 மார்ச் 1.. ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Feb 25, 2025,06:30 PM IST
சென்னை: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது.பகலில் பனிமூட்டம் இருந்தாலும் பிற்பகலுக்குப் பிறகு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில்  தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காற்று வீசி வருகிறது.

 இதற்கிடையே தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 2ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும், பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



அதன்படி, பிப். 26 - தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பிப் 27,- தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பிப்,28-தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மார்ச் 1 - கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 2 - தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை  இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.