தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Feb 28, 2025,07:51 PM IST
சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பெய்து வரும் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக நேற்று நாகை மற்றும் திருவாரூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக  கனமழை பெய்தது.  இதே போல் வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்தது. இதனால்  வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது.  

 தமிழ்நாட்டில் தற்போது அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இதமான காற்று வீசு வருகிறது. மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த சாரல் மழையில் நனைந்த படியே வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த திடீர் கோடை மழை விளைச்சலுக்கு கை கொடுக்கும் எனவும் விவசாயிகள்  மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் கிழக்கு திசை காற்றியின் மேக மாறுபாடு காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

இன்று கனமழை: 

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை கனமழை:

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ,தென்காசி விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மார்ச் 2, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மழை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.