காற்றுடன் வச்சு செய்த கன மழை.. வெளுத்தெடுத்த மழையில் நனைந்து குளிர்ந்த சென்னை!
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நகரின் பல பகுதிகளிலும், புறநகர்களிலும் மழை வெளுத்தெடுத்து விட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயில் வெளுத்தெடுத்தது. குறிப்பாக நேற்றும் இன்றும் நல்ல வெயில் அடித்ததால் மக்கள் அவதியடைந்தனர். ஆனால் இன்று இரவு 8 மணிக்கு மேல் நிலைமை மாறியது. சென்னையை நோக்கி திரண்டு வந்த மேகக் கூட்டத்தால் சூப்பரான மழையை சென்னை நகரம் சந்தித்தது.
ஜூலை மாதத்தில் பெய்த முதல் மழை இது. முதல் மழையே முத்திரை பதித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சென்னையின் வட பகுதிகள், நகர்ப்புறப் பகுதிகள், ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கூடிய செம மழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் லேசானதாகவும், பல இடங்களில் மிதமானதாகவும் இருந்த இந்த மழை சில இடங்களில் கன மழையாகவும் கொட்டியது.
அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தி.நகர், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் மக்கள் புழுக்கம் குறைந்து நிம்மதி அடைந்தனர். விடாமல் பெய்த மழையால் இரவில் வீடு திரும்பியோர் கடும் பாதிப்பை சந்தித்தனர்.
கடந்த சில நாட்களாகவே இரவில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் உள்ளிட்டோர் கணித்திருந்தனர். ஆனாலும் மழை பெரிதாக வரவில்லை. ஆனால் இன்று மிஸ் ஆகாது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படியே ஒரு நல்ல மழையை இந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் சென்னை பெற்றுள்ளது.
செம மழை பார்த்துப் போங்க.. வெதர்மேன் அட்வைஸ்
தற்போது சென்னையில் வெளுத்து வரும் கன மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போட்டுள்ள எக்ஸ் பதிவில், தற்போது சென்னையில் மணிக்கு 261.9 மில்லிமீட்டர் என்ற வேகத்திலான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதுவரை 8.4 மில்லி மீட்டர் அதாவது 80 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்தில் உள்ளது. விசிபிலிட்டி மிகவும் குறைவாக இருக்கிறது. வீடுகளுக்குத் திரும்புவோர் கவனமாக போங்க என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அலுவலகம் சென்று வீடு திரும்புவோர் பலரும் இந்த மழையில் மாட்டிக் கொண்டுள்ளனர். போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை மிகவும் கன மழையாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பலரும் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டுள்ளனர். மழை விடாமல் பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.