காலையிலேயேவா.. மதுரை சிவகங்கை மற்றும் காரைக்குடியை.. திடீரென நனைத்த கன மழை!
மதுரை: மதுரை,சிவகங்கை மற்றும் காரைக்குடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால் மக்கள் சர்ப்பிரைஸ் ஆகி விட்டனர். சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் முழுவதும் இன்று ஒரு சில மாவட்டங்களில் பனி மூட்டம் மற்றும் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 21 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஜிலுஜிலு மழை: இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, சிவகங்கை மற்றும் காரைக்காலில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்தது.
அதேபோல விருதுநகர் மாவட்டத்திலும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் இந்த வருடம் நல்ல மழையை கொடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருகிறது.