பிச்சு உதறப்போகும்.. மிக கனமழை.. தமிழகத்தில்.. நாளை, நாளை மறுநாள்.. ஆரஞ்சு அலர்ட்!
- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. தற்போது கடலோரப் பகுதிகளில் இரண்டு சுழற்சிகள் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவு காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்பதால் தமிழகத்தில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழையை எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கும், நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், கர்நாடகாவில் நாளை முதல் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று மழை நிலவரம்
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை மெரீனா கடற்கரை மணல் பரப்பில் தண்ணீர் தேங்கி ஆறு போல காணப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை உள்பட திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.
நாளை மழை நிலவரம்:
நாளை அதாவது 22ஆம் தேதி நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் மழை நிலவரம்:
நாளை மறுநாள் அதாவது 23ஆம் தேதி கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
24ஆம் தேதி நீலகிரி, தேனி ,திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.