நெல்லை, நாகர்கோவிலில் கன மழை.. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.. தேசியப் பேரிடர் படை விரைந்தது
Dec 17, 2023,12:41 PM IST
சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடுவதால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமரி முனை மற்றும் இலங்கை கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் கோடி மாவட்டங்கள், கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. இது சில இடங்களில் மிக கன மழையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு கன மழை தொடங்கி விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடைவிடாமல் கன மழை வாய்ப்புள்ளதாகவும், தாமிரபரணி கரையோர மக்கள் கவனமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாஞ்சோலை, கோதையாறு பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளுக்கு அதிக அளவில் நீர் வரத்து இருக்கும் என்றும் மணிமுத்தாறு நிரம்ப வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலைப் பகுதியில், 30 முதல் 50 செமீ வரை அதாவது 300 முதல் 500 மில்லி மீட்டர் அளவுக்கு மிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாஞ்சோலைப் பகுதியில்தான் மிக அதீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதர்கிடையே, பாபநாசம் சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து 10000 கனஅடி அளவிற்கு இருக்கின்ற காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக தாமிரபரணியில் 3000 கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் 80%, சேர்வலாறு 72%, மணிமுத்தாறு 45%
நீர் இருப்பு உள்ளது. பிற பகுதிகளிலும் மழை இருக்கின்ற காரணத்தினால் ஆங்காங்கே வந்து சேரும் நீரின் அளவையும் சேர்த்து தாமிரபரணியில் 5000 கன அடி அளவிற்கு நீர் செல்லும். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மழையால் நீர் வர வர நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.