கன மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Meenakshi
May 23, 2024,11:45 AM IST

கோவை:  பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கோடை மழை தற்போது தமிழகம் முழுவதிலும் பரவலாக பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கோடைகாலமா? மழை காலமா? என்ற ஐய்யம் ஏற்படும் அளவிற்கு தற்போதைய கிளைமேட் உள்ளது. தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்தால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது.




பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ள நிலையில், தற்போது அதன் நீர்மட்டம் 94.5 அடியாக உயர்ந்துள்ளது. அதில் 40 அடி சேறும், சகதியுமாகவே இருக்கும்.  முன்னர் எல்லாம் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு நீர் திறந்து விடப்படும். கோடை காலத்தில் வெயில் அதிகமாகி நீர் மட்டம் குறைந்ததினால் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருவதால், அணையின் நீர் மட்டம் மடமட வென உயர்ந்தது.


இதை அடுத்து பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளது.  அதுவும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற வெள்ள அபாய எச்சரிக்கை விடபப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.