சென்னையை உலுக்கிய கன மழையில்.. விளம்பர போர்டு விழுந்து பெண் பரிதாப மரணம்
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, டிஎல்எப் நிறுவனத்தின் போர்டு விழுந்ததில் ஒரு பெண் பலியானார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே பெய்து வரும் மழையால் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் நேற்று இரவு சென்னையில், அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி,வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், வடபழனி, சிந்தாதிரிபேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. மழையின் காரணமாக நேற்று இரவில் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக செல்ல முடியாமல் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தனர். விடிய விடிய பெய்த இந்த பலத்த மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதே போல் சென்னையில் தரையிறங்க வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக,வானில் வட்டமிட்டன. தரையிறங்க முடியாமல் இருந்த நான்கு விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னை தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் இரும்பு போர்டு விழுந்ததில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ரேணுகா என்பவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரேணுகாவிற்கு வயது 30 ஆகும். சென்னையில் பெய்த கனமழைக்கு தற்போது ஒருவர் உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.