லில்லி மலருக்குக் கொண்டாட்டம்.. ஏன்னா.. ஊட்டியில் செம மழை.. சுற்றுலா பயணிகளும் ஹேப்பிங்கோ!
ஊட்டி: கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், ஊட்டியில் இன்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் விடாமல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்தனர். சுற்றுலாப் பயணிகள் குஷியாகி விட்டனர்.
கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் வெயில் சக்கை போடு போட்டு வருகின்றது. இதனால் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஊட்டி, கொடைக்கானல் என்று மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். அப்படித்தான் இந்த வருடமும் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆனால், ஆங்கேயும் வெயில் வழக்கத்தை விட வாட்டி வதைத்து வந்தது. இதனால் சுற்றுலா சென்றவர்கள் கடுப்பானார்கள்.
வழக்கத்திற்கு மாறாக கோடை வாசஸ்தலங்களிலும் வெயில் அதிகமாக காணப்பட்டதால் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். மேலும், வெயில் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடும் ஊட்டியில் அதிகரித்தது. இதனால் பல விடுதிகள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா சென்றவர்கள் மட்டும் இன்றி உள்ளூர்வாசிகளும் மிகவும் கவலை அடைந்தனர். சீசன் களைகட்டும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்ததினால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்யியின் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. பிங்கர் போஸ்ட், ஹெல்கில், மஞ்சன கொரை, முத்தொரை பாலாடா, மேல்கவ்வட்டி ஆகிய இடங்களில் இடியுடன் கூடி மழை பெய்தது.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஓசூர், பேரிகை பாகலூர், சூளகிரி உத்தனப்பள்ளி பகுதியில் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெக்கை தணிந்து மக்கள் மனதில் உவகை குடியேறியது.