மும்பையில் விடாமல் தொடரும் கனமழை.. ஊரே வெள்ளக்காடு.. பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Manjula Devi
Jul 09, 2024,10:20 AM IST

மும்பை: மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  


மும்பை: 




கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகர்ப்புறங்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இந்த கனமழை வெள்ளத்தால் மும்பை மாநகரமே ஸ்தம்பித்து. குறிப்பாக

ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும், வந்து சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் மும்பை மற்றும் புனேவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பை மற்றும் புனேவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் மும்பையில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இதனால் இப்பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராய்கட்,பாலகர், ரத்னகிரி, மற்றும் சிந்து துர்க் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய கூடும் என்பதால் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கடற்கரைக்கும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் மும்பையில் தொடர் கனமழை எதிரொளியால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மும்பை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


அஸ்ஸாமில் வெள்ளம்:


அசாம் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களும் கனமழையால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழை வெள்ளம் காரணமாக அசாம் மாநிலத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் உணவு குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். அதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொளியால் சரயு ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் இரு கரை தொட்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


பீகாரிலும் கன மழை:


பீகாரில் தொடர் கனமழை பெய்து வருவதால் கண்டகி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்கு வசிக்கும் கரையோர மக்கள் அன்றாட தேவைக்கூட உணவு குடிநீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் உணவு தேவைக்காக படகுகளில் சென்று வருகின்றனர். 


ராஜஸ்தானில் கோடை வெயில் உச்சத்தை தொட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூரில் பெய்யும் கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு:


இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா, மண்டி, போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உத்தரகாண்டில் கன மழை காரணமாக பத்ரிநாத் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை  மூடப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி, தட்சின கன்னடா, உத்தர கன்னடா போன்ற மாவட்டங்கள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மங்களூரு கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை நீடிக்கும் என்பதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.