மக்களே உஷார் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்குமாம்.. இந்திய வானிலை மையம் தகவல்..!

Manjula Devi
Sep 27, 2024,09:26 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதன்படி தமிழகத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் மாலையிலும் இரவு நேரங்களிலும் நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருப்பூர், சேலம்,  திண்டுக்கல், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவியது. ஆனால் தென் தமிழகப்  பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.




இந்த நிலையில்  தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை, நாளை மறுநாள் ஒரு சில இடங்களில்  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


நாளை கனமழை: 


கோவை,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் கனமழை: 


கோவை,நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம்: 


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக இன்று முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தளவு அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்