சூடான ஜெயக்குமார்.. சுள்ளென்று சீறிய சேகர் பாபு.. வட சென்னையில் அனல் கிளப்பிய திமுக - அதிமுக!
சென்னை: வடசென்னை தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிலையில், யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ இருவரும் இன்று காலை 10 மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய வட சென்னை மண்டலம் வந்தனர். திமுக வேட்பாளர் கலாநிதிக்கு இரண்டாம் என் டோக்கன் வழங்கப்பட்டது. அதே சமயம் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஏழாம் எண் டோக்கன் வழங்கப்பட்டது.
திமுகவினர் உள்ளே வந்து அமர்ந்து விட்ட நிலையில் தடாலடியாக தனது வேட்பாளர் உள்ளிட்டோருடன் உள்ளே புகுந்தார் ஜெயக்குமார். நாங்கள்தான் முதலில் வந்தோம். எங்களை விட்டு விட்டு ஆளுங்கட்சி என்பதால் முக்கியத்தும் தர்றீங்களா என்று கடுமையாக வாதிட்டார் ஜெயக்குமார். அப்போது அமைச்சர் சேகர்பாபு நாங்கள் ஏற்கனவே டோக்கன் வாங்கி உள்ளோம். அதில் இரண்டாம் நம்பர் கொடுத்துள்ளார்கள் என கூறினார். ஆனாலும் விடாத ஜெயக்குமார், நாங்கள்தான் முதலில் வந்தோம். ஆனால் எங்களுக்கு ஏன் ஏழாம் நம்பர் டோக்கன் கொடுக்கப்பட்டது என கூறப்பட்டது.
இருவரும் யார் முதலில் வேட்பமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் தேர்தல் அதிகாரி இருவரையும் அழைத்து தனி அறையில் சமரசம் பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரமாக நீடித்தது. இதன் பின்னர் முதலில் அதிமுக வேட்பாளர் மனோ வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து வேட்டபுமனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் மற்றும் அமைச்சரை வெளியே விடாமல் அதிமுகவினர் தடுத்து போராட்டம் நடத்தினர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக திமுக இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வட சென்னை தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசும்போது, ஏன் காவல்துறை முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். சேகர்பாபு பேசும்போது, வேட்பாளர் கலாநிதிக்கு மாற்று வேட்பாளரான ஜெயந்தி காலை 9 மணிக்கே டோக்கன் பெற்றுவிட்டார். அதனால் முதலில் டோக்கன் பெற்றது திமுக வேட்பாளர் தான். அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்கின்றனர் என்று கோபமாக கூறினார்.