மறுபடியுமா.. தமிழ்நாட்டில்.. அடுத்த 4 நாட்களுக்கு.. வெப்பம் அதிகரிக்கும்.. கள்ளக் கடல் வேற வருதாம்!

Manjula Devi
Jun 11, 2024,06:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே ஒரு சில இடங்களில் வெயிலும் கொளுத்தி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , நாளை முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரே ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், வடக்கு அந்தமான் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரை 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கள்ளக் கடல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


அது என்ன கள்ளக் கடல்:


கடல் அமைதியாக இருக்கும். ஆனால் திடீரென எந்த விதமான காற்று, புயல் , சுழல் இல்லாமல் கடல் கொந்தளிக்குமாம். இந்த சமயத்தில்  கடலுக்கு அடியில் நிலநடுக்கம் கூட ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். இதைத்தான் கள்ளக் கடல் என்கிறனர். இதுபோன்ற சமயத்தில் கடலில் குளிப்பது மீன் பிடிக்கச் செல்வது போன்றவற்றில் ஈடுபடும்போது அதில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெயில் நிலவரம்: 


தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை அதிகரிக்க  கூடும். அப்போது வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.


சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.