சம்மர் வந்தாச்சு.. வெயிலும் வெளுக்குது.. அப்படியே வீரபாண்டி ஆறுக்கு ஒரு விசிட் அடிக்கலாமா?
Mar 11, 2025,05:13 PM IST
- தேவி
என்னடா மச்சா திடீர்னு போன் பண்ணி இருக்க
இல்லடா செல்வா உன் ஞாபகம் வந்துச்சு, அதான் போன் பண்ணேன், பேசணும் போல தோணுச்சு.. என்ன பண்ணிட்டிருக்கே
அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்லையே, சரி சரி விஷயத்துக்கு வா. எதுக்கு போன் பண்ணே
இல்லடா சம்மர் ஸ்டார்ட் ஆகுது. அதா எங்கேயாவது ஜாலியா ஒரு நாள் போய்ட்டு வரலாம்னு யோசனை.. போலாமா
அதான பார்த்தேன், இவன் காரணம் இல்லாம நமக்கு போன் பண்ண மாட்டானேனு.
எப்படிடா கரெக்டா கண்டுபிடிச்ச
மொச புடிக்கிற நாயே மூஞ்ச பாத்தா தெரியாதா.. சரி எங்க போகலாம் ஊட்டி கொடைக்கானல் இப்படி எங்கேயாவது போகலாமா
அங்கெல்லா பெரிய டூர். ரொம்ப செலவாகும் டா.
அப்படீன்னா உனக்கு காசும் செலவாக கூடாது ஜாலியாவும் இருக்கணும் அப்படித்தானே
அப்படி பச்சையா சொல்ல முடியாது.. ஆனா அப்படியும் சொல்லலாம்.. அப்படி ஏதாவது இடம் இருக்கா
இருக்கே.. தேனிக்கு போய் இருக்கியா? தேனிக்கு பக்கத்துல வீரபாண்டி கோவில் இருக்கு. அது ரொம்ப பழமையான கோவில். தென் தமிழகத்தினுடைய ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்னு. வருஷத்துக்கு ஒரு தடவை அதாவது ஏப்ரல் மாதத்தில கடைசி செவ்வாய்க்கிழமைல இருந்து வைகாசி முதல் வார செவ்வாய் வரை தொடர்ந்து எட்டு நாள் திருவிழா நடக்கும். இந்த திருவிழால பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களுடைய வேண்டுதல செஞ்சிட்டு போவாங்க. இந்த திருவிழாவில ஆயிரங் கண் பானை எடுப்பது ரொம்ப விசேஷம்.
அது எப்ப இருந்து நடக்குதுன்னா, பாண்டிய மன்னன் அவனுடைய ஊழ் வினையினால் தன்னுடைய பார்வை இழந்ததாகவும் எத்தனையோ கோவிலுக்கு போய் அவனுடைய பார்வை சரி வராம, இந்த கோவிலுக்கு வந்து ஆயிரம் கண் பானை எடுத்ததுனால தான் கண் பார்வை வந்ததாகவும் நம்மளுடைய புராணங்களில் சொல்லப்பட்டு இருக்குது. அது மட்டும் இல்ல. இந்த திருவிழா சமயத்துல கம்பத்துல கொடி ஏத்திருப்பாங்க, அந்த நேரத்துல கம்பத்துக்கு தண்ணி ஊத்தி நம்முடைய வேண்டுதலை செஞ்சுக்கலாம். இது ரொம்ப விசேஷம். அந்த நாட்களில் வீரபாண்டி கோயிலுக்கு போறது ரொம்ப நல்லது. கூட்டம் அதிகமா இருக்கும். எனக்கு அந்த கோவில் ரொம்ப பிடிக்கும் அந்த கோயில்ல வந்து கௌரி மாரியம்மன் பெயர்ல அம்பாள் கன்னி ரூபமாக காட்சியளிப்பாங்க.
நீ சொல்லும்போதே சூப்பரா இருக்கே. அந்த கோவிலுக்கு வரணும் போல இருக்கு. சரி, நா எப்படி வர்றதுனு எனக்கு வழி சொல்லு.
தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டா, அங்க இருந்து வீரபாண்டி கோவிலுக்குனு தனியா லோக்கல் பஸ் நிறைய இருக்குது. அந்தக் கோவில் மட்டும் பிரபலம் இல்லை. அந்தக் கோவில் அருகே உள்ள ஆறும் ரொம்பப் பிரபலம். பலரும் அங்கு குளிக்க விரும்புவாங்க.. ஏன்னா அது ஒரு காலத்துல ஷூட்டிங் ஸ்பாட்டும் கூட. சூப்பரா இருக்கும். கோவில் பக்கத்திலேயே இந்த ஆறு இருக்கு. திருவிழா டயத்துல பக்தர்கள் எல்லாமே அந்த ஆத்துல குளிச்சிட்டு தன்னுடைய பழைய ஆடைகளை வந்து அங்கேயே கழட்டி போட்டுட்டு புது ஆடையை போட்டுட்டு தான் கோவிலுக்கு வருவாங்க. அதை ஒரு வேண்டுதலாகவே பண்ணுவாங்க. அதனால அந்த திருவிழா டயத்துல ஆத்துல போய் குளிக்கிறப்ப ரொம்ப கூட்டம் அதிகமா இருக்கும். ஆனா இப்ப போகலாம்.
மத்த நேரங்கள்ல அந்த ஏரியா பக்கத்துல இருக்கிற மக்கள் என்ன பண்ணுவாங்கனா குடும்ப குடும்பமா வந்து அந்த ஆத்துல குளிப்பாங்க. வீட்டிலேயே சாப்பாடு எல்லாம் கட்டிட்டு வந்துட்டு குளிச்சிட்டு அங்கேயே ஓரமா உக்காந்து சாப்பிட்டு போவாங்க.
டேய் நீ சொல்ற பாத்தா எனக்கு உடனே அந்த ஆத்துல குளிக்கணும் போல இருக்குடா. எப்ப போகலாம் சொல்லு நானும் கிளம்பி வரேன். நீ சொல்ல சொல்ல எனக்கு ரொம்ப கியூரியாசிட்டி அதிகமாகுது. வேற ஏதாவது அந்த ஆத்தை பத்தி தெரிஞ்சா சொல்லு.
அட நிறைய படங்களில் இந்த இடம் வருதுடா. சென்னை 28 படத்தோட பார்ட் 2 பாத்திருக்கியா. அதுல சொப்பன சுந்தரி பாட்டு பாத்திருக்கியா.. அந்த டான்ஸ் அந்த இடத்தில் தா ஆடுவாங்க.
அடடே சூப்பரப்பு.. செமையா இருக்குமே.. நான் கிளம்பி வர்றேன் நாம போறோம்..!
சரி சரி ரொம்ப அலையாத. கிளம்பி வா போகலாம்.. எனக்கு ஒரு டவுட்டு ஆத்துல குளிச்சிட்டு கோயிலுக்கு போகலாம், கோயில்ல போய் உண்டியல்லையாவது காசு போடுவியா.. இல்லை அங்கையும் கஞ்சத்தனத்தைக் காட்டுவியா..
என்னடா மச்சான் அதான் நீ இருக்கேல.. நண்பனுக்கு காசு கொடுக்க மாட்டியா என்ன..!
ஆக மொத்தம் கடைசி வரைக்கும் நீ திருந்தவே மாட்டேல்ல!
என்னங்க கதையைப் படிச்சீங்களா.. அட இது கதை இல்லைங்க நிஜம்தான்.. வீரபாண்டி ஆறு மிகப் பிரபலமானது. கோவிலைப் போலவே இந்த ஆறும் பிரபலமான ஸ்பாட்தான். முல்லைப் பெரியாறு அப்படின்னு சொல்றோம் இல்லையா.. அதுல முல்லை ஆறுதான் இந்த வீரபாண்டியில் ஓடும் ஆறு. இந்த ஆற்றில் தண்ணீர் நிறைய வரும்போது பார்க்கவே படு ஜோராக இருக்கும். நிறையப் படங்களில் இதைப் பார்த்திருக்கலாம். குறிப்பாக பாரதிராஜா படங்களில் நிறைய இது வந்திருக்கிறது. தேனி மாவட்டமே இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம்தான். அங்கு ரசித்து மகிழ நிறைய இடங்கள் உள்ளன. செலவே இல்லாமல் சிம்பிளாக வந்து போக இதுபோன்ற இடங்களும் உள்ளன. சம்மர் ஆரம்பிச்சாச்சு.. மதுரை சுற்றுப் பகுதிகளில் உள்ளவர்கள் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.