"என் மகனுக்கு நல்ல பொண்ணா பாருங்களேன்".. சோனியா காந்தியே சொல்லிட்டாரு!

Aadmika
Jul 29, 2023,02:38 PM IST
டெல்லி : ராகுல் காந்திக்கு ஏற்ற நல்ல பெண்ணை நீங்களே பாருங்க என தன்னை சந்திக்க வந்த ஹரியானா மாநில பெண்களிடம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோதா யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரியில் பாதயாத்திரையை துவக்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மொத்தம் 146 நடைபெற்ற இந்த யாத்திரையில் 12 மாநிலங்களில் 3500 கி.மீ., நடைபயணமாக சென்றார் ராகுல் காந்தி.

பாஜக அரசின் மோசடிகளை, தோல்விகளை, பொய்களை மக்களிடைய அம்பலப்படுத்த வேண்டும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், 2024 ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு நோக்கில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார். இந்த யாத்திரை இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

இந்த யாத்திரையின் போது ஹரியானா மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள சோனிபட் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு சென்ற போது, பெண்கள் சிலரை சந்தித்தார். அவர்களிடம் டெல்லி வந்து கண்டிப்பாக வீட்டிற்கு வந்து தன்னுடன் உணவு சாப்பிட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற அந்த கிராமத்து பெண்கள், நேற்று டில்லிக்கு வந்தனர்.

அவர்கள் ராகுலின் வீட்டிற்கு சென்று சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். மேலும் உணவும் சாப்பிட்டனர். இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் இதை பகிர்ந்து சில நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வைகள் குவிந்தது. 

இது தனக்கும், அம்மா சோனியாவிற்கும், சகோதரி பிரியங்காவிற்கும் மறக்க முடியாத நாள். அவர்கள் பல மணி நேரம் எங்களுடன் நேரத்தை செலவிட்டனர். எங்களுக்கு சுத்தமான நெய், வீட்டிலேயே செய்த ஊறுகாய் என பலவற்றை பரிசாக கொடுத்தனர் என ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லிக்கு வந்திருந்த ஹரியானா பெண்கள் சோனியா காந்தியுடன் வெகு நேரமாக பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராகுல் காந்தியின் திருமணம் பற்றி ஒரு பெண் சோனியா காந்தியிடம் விசாரித்தார். அதற்கு பதிலளித்த சோனியா, அவருக்கு  ஏற்ற மாதிரியான பெண்ணை நீங்களே ஏன் பார்க்கக் கூடாது? என்று பதிலுக்கு கேட்கவே அவர்கள் உற்சாகமடைந்தனர்.

சமீபத்தில் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும் ராகுலிடம், எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள்? சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதிலும் இதே போன்று நாங்கள் கலந்து கொள்கிறோம் என்றார். இதைக் கேட்டு அருகில் இருந்த சோனியா காந்தியும் சிரித்தார். ஒரு தாயாக, தனது மகனுக்கு திருமணம் நடக்காமல் இருக்கும் வேதனை அவரது முகத்தில் தென்பட்டதைப் பார்க்க முடிந்தது.

இப்போது கிராமத்தில் உள்ள பெண்களும் கூட ராகுலின் திருமணம் பற்றி கேட்க துவங்கி விட்டனர். ஆனால் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தனது அம்மா சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தியை போன்ற குணம் கொண்ட பெண்ணை தான் திருமணம் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார் ராகுல் காந்தி. இதனால் பெண்கள் பலர் அவருக்கு விண்ணம் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள ராகுல் காந்தி இதுவரை முடிவு செய்யவில்லை.