ஹரியானா கலவரம் : சில்லறை விலைக்கு பெட்ரோல், டீசல் விற்க தடை

Aadmika
Aug 02, 2023,10:29 AM IST
குர்கிராம் : ஹரியானாவில் கலவரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளதால் குர்கிராம் பகுதியில் சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரிய அளவில் கலவரமாக மாறி, மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் போலீஸ்காரர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.57 லட்சம் நிவாரணம் அளிப்பதாக அரியானா போலீஸ் அறிவித்துள்ளது. 



விஷ்ணு இந்து பரிஷித் அமைப்பின் ஊர்வலத்தை நுஹ் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது இந்த மோதல் வெடித்துள்ளது. கலவரம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

இதனால் கலவரத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குர்கிராமில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் விற்க மாவட்ட மாஜிஸ்டிரெட் தடை விதித்துள்ளார். பட்ஷாபூர் சந்தையும் மூடப்பட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மார்க்கெட் பகுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கப்பட்டு வருவதால் மார்கெட், கடைகள் ஆகியன மூடப்பட்டுள்ளன.