என்னது கேப்டனையே தூக்கிட்டாங்களா.. ஹர்டிக் பாண்ட்யாவை அள்ளிக் கொண்டு போன மும்பை இந்தியன்ஸ்!

Su.tha Arivalagan
Nov 27, 2023,09:03 AM IST

சென்னை:  குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்து கொண்டிருந்த ஹர்டிக் பாண்ட்யாவை, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி விட்டது. நேற்று இரவு வரை ஹர்டிக் பாண்ட்யாவை குஜராத் டைட்டன்ஸ்தான் வைத்திருந்தது, தக்கவும் வைத்திருந்தது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இரவுக்கு மேல் ஹர்டிக், மும்பை பக்கம் வந்து விட்டார்.


தக்க வைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகுதான் ஹர்டிக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத்திடம் பேசி வாங்கியுள்ளதாக தெரிகிறது.  நேற்று மாலைக்குள் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தக்க வைப்பது, விலக்குவது குறித்து முடிவெடுக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். 


ஹர்டிக் பாண்ட்யாவை விடுவிப்பதற்கு வசதியாக, தனது அணியில் இருந்த கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் விடுவித்தது.  இதையடுத்து ஹர்டிக்கை விடுவித்தது குஜராத் டைட்டன்ஸ். கேமரூன் க்ரீனை தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தின்போது பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டவர் க்ரீன் என்பது நினைவிருக்கலாம்.




மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தொடர்ந்து இருந்து வந்தார் ஹர்டிக் பாண்ட்யா. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து வந்தார். இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் தொடரிலேயே ஹர்டிக் தலைமையில் அட்டகாசமாக ஆடி கோப்பையை வென்று அசத்தியது நினைவிருக்கலாம்.


ஐபிஎல் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றது இரண்டு அணிகள்தான். ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ், இன்னொன்று குஜராத் டைட்டன்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது ஐபிஎல் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். ஷேன் வார்னே தலைமையில் அந்தக் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.