குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகுகிறாரா ஹர்டிக் பான்ட்யா?.. மும்பைக்குத் தாவ திட்டம்!

Su.tha Arivalagan
Nov 25, 2023,05:28 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருக்கும் ஹர்டிக் பான்ட்யா விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தாவப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அணியில்தான் முதலில் இருந்தார் ஹர்டிக் பான்ட்யா என்பது நினைவிருக்கலாம்.


2 ஆண்டுகளாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடி வந்தார்.  இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்டிக் பான்ட்யா3, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஐபிஎல் வீரர்கள் பரிமாற்ற நடைமுறைகள் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.. அதாவது நாளையுடன் முடிவடைகிறது. எனவே ஹர்டிக் பான்ட்யா அணி மாறுவாரா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்து விடும்.




மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 சீசன்களில் விளையாடிவர் ஹர்டிக் பான்ட்யா. கடந்த 2002ம் ஆண்டுதான் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்றார். அங்கு கேப்டனாக்கப்பட்டார். கடந்த 2 தொடர்களாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வந்தார்.  இதில் முதல் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம்.


மறுபக்கம் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, டி20 போட்டிகளிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அது ஐபிஎல்லுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. ரோஹித் சர்மா தலைமையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை ஹர்டிக் பான்ட்யா மும்பை அணியில் இடம் பெற்றால் அவர் கேப்டனாக்கப்படுவாரா அல்லது ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவாரா என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.