"அயராத உழைப்பு.. வெற்றி தரும்".. இதயம் நல்லெண்ணெய் நிறுவனரின் இனிக்கும் பேச்சு!

Su.tha Arivalagan
Sep 12, 2023,04:13 PM IST
சிவகங்கை: வாழ்க்கையில் சாதிக்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் அயராத உழைப்பு இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும் என இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்து தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்துவுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.  ஆசிரியை முத்துலட்சுமி அவர்கள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



நிகழ்ச்சியில் முத்து பேசுகையில், திருக்குறள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. திருக்குறளின் மூலமாக நாம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். திருக்குறளின் மூலமாகத்தான் காந்தியடிகள்  பல தருணங்களில் முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும், என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். காந்தியடிகள் தனது வாழ்க்கையில் அகிம்சை, சகிப்புத்தன்மை இரண்டையும் மிக முக்கியமானதாக கருதினார்.  இவை இரண்டையும் திருக்குறள் தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார். 



நீங்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம். அதற்கு உங்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். தொடர்ந்து அயராத உழைப்பு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும். குறிப்பிட்ட பகுதியில் இருந்த எங்களது வியாபாரம் இன்று உலகம் முழுவதும் வர்த்தகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எனது கனவு நினைவானது என்றார்.

முத்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினார்.