முகம்மது சமியை வேஸ்ட் பண்ணாதீங்க.. ஹர்பஜன் சிங் சுளீர்!

Su.tha Arivalagan
Sep 09, 2023,02:48 PM IST

டெல்லி:  பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியா கோப்பைப் போட்டியில் முகம்மது சமி சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வியப்பு வெளியிட்டுள்ளார். அவர் நிச்சயம் அணியில் இடம் பெற வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


ஆசியா கோப்பைப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் வேகப் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் பயங்கரமாக இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களை அவர்கள் திணறடித்து விட்டனர்.




இந்தியத் தரப்போ நல்ல அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளரான முகம்மது சமியை அணியில் சேர்க்காமல் அவருக்குப் பதில் முகம்மது சிராஜை சேர்த்து விளையாடியது.  அதேசமயம், அடுத்த போட்டியில் சமி சேர்க்கப்பட்டார். அதுவும் கூட ஜஸ்ப்ரீத் பும்ராவின் மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால், பும்ரா மும்பை போக வேண்டி வந்ததால்தான் சமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.


இதுகுறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங் கூறுகையில், சமி விளையாட வேண்டும். ஒருவரது அனுபவத்தை நாம் வீணடிக்கக் கூடாது. ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் சும்மா இருப்பது சரியல்ல. சிராஜுக்கு முன்பு சமி பந்து வீச அழைக்கப்பட வேண்டும். 7வது நிலை வரை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் முதலில் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அவர்கள் 260 ரன்கள் வரை மட்டுமே எடுத்தாலும் கூட பவுலர்கள் அதை டிபன்ட் செய்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.


ஷர்துள் தாக்கூர் வந்து விளையாட வேண்டும் என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் நினைக்கக் கூடாது. அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.  அதுதான் சரியாக இருக்கும். ஷர்துள் தாக்கூர் பேட் செய்ய வேண்டும், பவுலிங்கும் செய்ய வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். சரிதான்.. ஆனால் அவரது கவனம் சிதறும், இரண்டையும் சிறப்பாக செய்ய முடியாது. எனவே அவரை முக்கியமாக பந்து வீச்சுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசர காலங்களில் அவரது பேட்டிங் கை கொடுக்கட்டும் என்றார் ஹர்பஜன் சிங்.