எனக்கு பசிக்குது... கணவருடன் முதல் கர்வா சவுத் கொண்டாடிய ஹன்சிகா.. க்யூட்
மும்பை : திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் முதல் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாடிய க்யூட்டான வீடியோவை பகிர்ந்து, ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் நடிகை ஹன்சிகா.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்த பிரபலங்களில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்து கலக்கினார். 2010 ம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். பப்ளியான, க்யூட்டான பெண்ணாக வந்து முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். இதனால் இவரை சின்ன குஷ்பு என்றே ரசிகர்கள் செல்லமாக கூப்பிட துவங்கி விட்டனர்.
ஜெயம் ரவியுடன் நடித்த எங்கேயும் காதல் படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட ஹன்சிகா, தொடர்ந்து விஜய், சிம்பு, சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனார். பல மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். பிறகு திடீரென தமிழ் சினிமா பக்கம் காணாமல் போன ஹன்சிகா, ஸ்லிம்மான தோற்றத்துடன் மகா படத்தின் மூலம் ரீஎன்டரி கொடுத்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் திடீரென திருமணத்தை அறிவித்த ஹன்சிகா, தொழிலபதிபர் சோகைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுடன் தனது சொந்த வாழ்க்கை குறித்த க்யூட்டான போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாட மெகந்தி போட்டு தயாரானதை கூட போட்டோ ஷூட் நடத்தி அறிவித்தார்.
கர்வா சவுத் என்பது வடஇந்தியாவில் திருமணமான பெண்களால் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் இந்த நாளில் காலை சூரிய உதயம் துவங்கி, மாலையில் சந்திர உதயம் வரை திருமணமான பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிவன், பார்வதி, விநாயகர், முருகனை வேண்டிக் கொண்டு, நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பார்கள். மாலையில் ஒரு சல்லடை வழியாக சந்திரனை தரிசித்த பிறகு, தனது கணவரின் காலில் விழுந்து ஆசி பெற்று, அவரது கையால் கொடுக்கும் இனிப்பு மற்றும் தண்ணீரை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
கர்வா சவுத் பண்டிகை கொண்டாடும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளையே அணிவார்கள். இது தவிர மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, பிங்க் நிறங்களிலும் உடையணிந்து விரதம் இருப்பார்கள். இந்த விரதம் மிக முக்கியமானது என்பதால் அனைத்து பெண்களும் இந்த நாளை கொண்டாடுவார்கள். சமீப காலங்களாக திருமணமாகாத பெண்களும் தங்களின் காதலரையே மணம் முடிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த விரதத்தை இருக்கிறார்கள். இந்த ஆண்டு கர்வா சவுத் விரதம் நவம்பர் 01 ம் தேதி கடைபிடிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு தலை தீபாவளி போல், தலை கர்வா சவுத் விரதத்தை ஹன்சிகா இருந்துள்ளார். விரதத்தை நிறைவு செய்வதற்காக சந்திர தரிசனம் செய்வதற்காக தனது கணவருடன் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் ஹன்சிகா தனது கணவரிடம், எனக்கு பசிக்குது என சின்ன குழந்தை போல் க்யூட்டாக சொல்கிறார். அதற்கு அவரது கணவரும் எனக்கும் பசிக்குது என சொல்கிறார். இருவரும் ஜாலியாக பேசிக் கொள்ளும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹன்சிகா. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.