ஹமாஸ் போராளிகள் நிர்வாணப்படுத்தி கொன்டு சென்ற பெண் அடையாளம் தெரிந்தது!

Su.tha Arivalagan
Oct 08, 2023,12:29 PM IST

டெல் அவிவ்: இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கொன்று அவரது நிர்வாண நிலையிலான உடலை ஜீப்பில் வைத்து ஹமாஸ் போராளிகள் எடுத்துச் சென்ற நிலையில், அந்தப் பெண்ணின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது.


ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி அந்த நாட்டை அதிர வைத்துள்ளனர். முதலில் சரமாரியான ராக்கெட் வீச்சை நடத்தி அந்த நாட்டு ராணுவத்தை அதிர வைத்த ஹமாஸ் அமைப்பு பின்னர் அதன் போராளிகளை இஸ்ரேலுக்குள் ஊடுறுவ வைத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. பின்னர் நூற்றுக்கணக்கானோரை அவர்கள் பிணைக் கைதிகளாக காஸா பகுதிக்குள் கொண்டு சென்றனர்.




இப்படி பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் ஏராளமானோர் ராணுவத்தினர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக முக்கியப் படைப் பிரிவின் கமாண்டர் ஒருவரையும் பிடித்துச் சென்றுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்று அந்தப் பெண்ணின் உடலை ஆடைகளின்றி ஜீப்பில் போட்டு கொண்டு சென்ற மோசமான காட்சியும் வெளியானது. அந்தப் பெண்ணின் உடலை தலைகுப்புற படுக்க வைத்து காலை உடல் மீது  வைத்தபடி ஹமாஸ் போராளிகள் சென்றது அனைவரையும் அதிர வைத்தது.


அந்தப் பெண் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை என்று ஹமாஸ் கூறியிருந்தது. ஆனால் அந்தப் பெண்ணின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் ஷானிலோக். 30 வயதாகும் அவர் ஒரு டாட்டூ கலைஞர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். இஸ்ரேலில் நடந்து வரும் இசை விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். தனது குழுவினரோடு நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டிருந்தபோதுதான் ஹமாஸ் போராளிகளிடம் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.


அவரது காலில் வரையப்பட்டுள்ள டாட்டூவை வைத்துத்தான் அந்தப் பெண் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தனது மகளின் உடலையாவது திரும்பக் கொடுத்து விடும்படி ஹமாஸ் அமைப்புக்கு ஷானியின் தாயார் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார்.