தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடங்கியது!

Meenakshi
Dec 13, 2023,11:42 AM IST
சென்னை: தமிழகம் முழுவதிலும்  அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இன்று அரையாண்டு தேர்வு தொடங்கியது.

மிச்சாங் புயல் காரணமாக அரையாண்டு தேர்வுகள் 2 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் அரையாண்டு தேர்வு  நடைபெறுவது வழக்கம். ஆதலால் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் பள்ளி கல்வித் துறை தேர்வுகளை ஒத்தி வைத்தது. அத்துடன் புதிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டது.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகமாக பெய்தது. வீடுகளை சுற்றி ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. இதனை அடுத்து கடந்த வாரம் முழுவதும் இந்த நான்கு மாவட்டகளில் உள்ள  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இங்குள்ள மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் நனைந்ததால்  தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அம்மாணவர்களை  கருத்தில் கொண்டு அரையாண்டு தேர்வுகளை 2 நாட்களுக்கு ஒத்திவைத்து பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

  

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மழைநீர் தேங்கி இருந்த பகுதிகளில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்னேற்பாட்டினால் படிப்படியாக இந்த 4 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு தற்போது திரும்பி உள்ளது. இதனை அடுத்து அனைத்து பள்ளிகளும் நேற்று திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் செயல்பட தொடங்கின. மாணவர்களின் புத்தகங்கள் சேதாரம் ஆகியிருந்ததால் அவர்களுக்கு நேற்று புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

குறிப்பாக, சென்னையில் மட்டும் 12 ஆயிரம் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்திருந்தனர். செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் 8000க்கு மேற்பட்ட மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தனர். இம் மாணவர்களுக்கு சேலம், தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புத்தகங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக திங்கட்கிழமை தொடங்கியிருந்த அரையாண்டு தேர்வு இன்று புதன்கிழமை தொடங்கியுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின் படி  1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று அரையாண்டு தேர்வுகள் தொடங்கின. மாணவர்களும் காலையிலேயே சுறுசுறுப்பாக வந்து தேர்வுகளை எழுதி வருகின்றனர். நல்லா ஜாலியா எழுதுங்க பசங்களா.. எந்தக் கவலையும் இல்லாமல்!