பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், மனைவி சைந்தவி இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் தனது பள்ளி தோழியான பின்னணி பாடகி சைந்தவி என்பவரை சிறுவயதில் இருந்து காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
இந்த தம்பதிகள் இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் தெரிவித்தனர். இது சோசியல் மீடியாவில் கடும் வைரலானது. இவர்களின் 12 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் தற்போது மன கசப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பரஸ்பரமாக பிரியப் போவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்து விவாகரத்து மனு கொடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளது அனைவரையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.