எனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க.. தயவு செய்து விவாதிக்காதீங்க... ஜி.வி.பிரகாஷ் கோரிக்கை!
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது திருமண முறிவு குறித்து பொது வெளியில் பலரும் விவாதித்து வருவது குறித்து கடும் அதிருப்தி அடைந்துள்ளார். நியாயமான உணர்வுகளை மக்கள் மதிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் பிரிந்து விட்டனர். இதுதொடர்பான அறிவிப்பை இருவரும் நேற்று வெளியிட்டனர். தங்களது பிரைவசிக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று இருவரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் பலரும் இவர்கள் இருவர் குறித்தும் கருத்துக்களைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நடந்துச்சா இப்படி நடந்துச்சா என்று அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ச்சியும் செய்து கொண்டுள்ளனர். இதனால் ஜி.வி.பிரகாஷ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
புரிதலும் போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பெயரில் இரு மனங்கள் இணைவது பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையது அல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுவதால் அது யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா.
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும் காரணங்களையும் என்னுடைய நெருங்கி பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு தனி மனிதனின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.