ஜி.பி.முத்துவுக்கு என்ன ஆச்சு... அல்லோகலப்படும் சோஷியல் மீடியா!

Su.tha Arivalagan
Apr 16, 2023,12:47 PM IST

சென்னை : டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவின் இன்ஸ்டா போஸ்டை பார்த்து விட்டு அவருக்கு என்னாச்சு என்பது தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. 


டிக்டாக் ஆப் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜி.பி.முத்து. பிறகு யூட்யூப்பிலும் கலகலப்பான வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானார். நெல்லை தமிழில் இவர் தன்னை விமர்சிப்பவர்களை வசைப்படும் டயலாக்கும், ஸ்டைலும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டது. 


டிக்டாக்கில் வீடியோ போட்டதை விட, மற்றவர்களுடன் இவர் போட்ட சண்டை தான் இவர் பிரபலமாக்கியது. டிக்டாக் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.




பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக, வீட்டிற்குள் முதல் ஆளாக சென்று ஜி.பி.முத்து, இரண்டாவது வாரத்திலேயே தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும், தயவு செய்து தன்னை வெளியே அனுப்பி வைக்கும்படியும் பிக்பாசிடம் கெஞ்ச துவங்கி விட்டார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பிக்பாசே இவரை வெளியே அனுப்பி வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 


அஜித் நடித்த வலிமை படத்தில் சில காட்சிகள், சன்னி லியோனுடன் ஒரு படம் என பட வாய்ப்புக்களும் இவரை தேடி வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போலவும், தனக்கு டெஸ்ட்கள் எடுக்கப்படுவது போலவும் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார் ஜி.பி.முத்து. இதனை பார்த்த அவரது ரசிகர்கள், அண்ணே என்னாச்சு என பதறிப் போய் கேட்டு வருகின்றனர். அவர் விரைவில் குணமடையவும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


ஆனால் அவரது உடல்நிலைக்கு என்ன பிரச்சனை, அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவருக்கு என்னாச்சு என்பது பற்றி சோஷில் மீடியாவில் பலரும் ஆர்வமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் சாதாரண காய்ச்சல் காரணமாகத்தான் இவரை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்இவரது போட்டோவுக்கு வந்த கமெண்ட்டுகளைப் பார்த்தால் செம காமெடியாக இருக்கிறது.


இதையெல்லாம் பார்த்து உடம்பு தேறி வந்த பின்னர் "செத்த பயலுவளா.. நாறப் பயலுவளா.. பேதில போவான்" என்று முத்து வெளுக்கப் போவதை நினைத்துத்தான் சிரிப்பாக வருகிறது.