"மச்சா.. ரகுநாதன்.. ஏதோ நம்ம கிட்ட மறைக்கிறார்னு நினைக்கிறேன்டா".. (கெளதமியின் காதல் -7)

Su.tha Arivalagan
Jan 22, 2024,06:58 PM IST

- சுதா. அறிவழகன்


குளிக்கத் தோன்றவில்லை. எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்படியே படுக்கையில் படுத்தவளின் கண்களை தூக்கம் தழுவிச் சென்றது... சிறிது நேரம் அப்படியே உறங்கி விட்டாள் கெளதமி.. திடீரென ஏதோ சத்தம் கேட்டு விழித்தவள் ஜன்னல் வழியா கத்திக் கொண்டிருந்த பறவைகள் எழுப்பிய ஒலி என்று உணர்ந்து அமைதியானாள். அய்யோ நேரமாயிருச்சே என்று தனக்குள்ளாக கூறிக் கொண்டு எழுந்து பாத்ரூமுக்குப் போனாள். வேகமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தவள் ஜார்ஜுக்குப் போன் செய்தாள்.


"அண்ணா நான் ரெடியாயிட்டேன்.. போலாமா"


"நாங்க எப்பவோ ரெடிம்மா.. கீழேதான் இருக்கோம்.. நீ ரொம்ப டயர்டா இருந்தியா.. சரி கொஞ்சம் தூங்கட்டும்னுதான் டிஸ்டர்ப் பண்ணலை.. ரெடியாயிட்டா கீழே வா"


"அய்யோ அப்படியா.. தோ வர்றேண்ணா"


அதற்குள் ஜார்ஜ்  அந்தக் கடைக்காரர் பற்றி ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் விசாரித்து விட்டிருந்தான். கடை உரிமையாளர் பெயர் ரகுநாதன். அவர்தான், நவீனின் சித்தப்பா. காலை 10 மணிக்குத்தான் கடையைத் திறப்பார்களாம். அதற்குள் சாப்பிட்டு விடலாம் என்று ஜார்ஜ் யோசனை கூறவே எல்லோரும் சரி என்றனர்.




ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே சைவ சாப்பாடு சூப்பராக இருக்கும் என்று ரிசப்ஷனிஸ்ட் கூறியிருந்ததால் அங்கேயே போனார்கள். அனைவருமே நல்ல சோர்வு, நல்ல பசி  என்பதால் ருசித்து சாப்பிட்டனர்.. கெளதமிக்குத்தான் எதுவுமே இறங்கவில்லை.. இரண்டே இரண்டு இட்லியை வாங்கிக் கொண்டு.. அதிலும் பாதி இட்லியைத்தான் சாப்பிட்டாள்.. மிச்சத்தை அப்படியே வைத்து விட்டாள்.


பசியாறிய திருப்தியில் டெக்ஸ்டைல்ஸை நோக்கி வேக நடை போட்டார்கள். கடை திறக்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் மிக குறைவாக காணப்பட்டனர். கல்லாவில் இருந்த நபரைப் பார்த்தால் பக்திப் பழமாக காணப்பட்டார். 


அவரிடம் நெருங்கிச் சென்ற ஜார்ஜ் விவரம் கூறிப் பேசினான்.


"சார் வணக்கம்.. என் பெயர் ஜார்ஜ்.. நான் உங்க சொந்தக்காரர் நவீனோட பிரண்ட், சென்னைல இருந்து வர்றோம்.. இவங்கெல்லாம் என்னோட பிரண்ட்ஸ்தான்.. நவீன் கிட்ட இருந்து கொஞ்ச நாளா போன் எதுவும் வரலை. அதான் என்னாச்சுன்னு பார்த்துட்டுப் போக வந்தோம்"


"நவீனா.. அது என்னோட உறவுக்காரர் இல்லை தம்பி.. எங்க முதலாளியோட அண்ணன் பையன். என் பெயர் சுப்பிரமணியம்.. நான் இந்தக் கடையோட கேஷியர்.. நீங்க எங்க முதலாளி கிட்ட பேசினீங்கன்னா தகவல் கிடைக்கும். எனக்குத் தெரிஞ்சு நவீனோட அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலை.. அதான் திருவனந்தபுரம் கூட்டிட்டுப் போயிருக்கிறதா எங்க முதலாளி சொல்லியிருந்தார். நீங்க அவர் கிட்ட பேசிப் பாருங்களேன்."


"ஓ.. அப்படீங்களா.. உங்க முதலாளி எப்ப சார் வருவார்"


"அவர் இன்னிக்கும் நாளைக்கும் கடைக்கு வர மாட்டார். ஒரு விசேஷம்னு வெளியூர் போறார். நீங்க இப்ப போனா வீட்டுல அவரைப் பார்க்கலாம்.. இல்லாட்டி மத்தியானம் கிளம்பி அவர் வெளியூர் போயிருவார். போயிட்டார்னா நாளைக்கு ராத்திரிதான் திரும்ப வருவார்"


"அப்டியா.. வீடு எங்க சார் இருக்கு. போன் நம்பர் இருக்கா.. கொஞ்சம் கொடுங்களேன்"


"988..... இதுதான் அவரோட நம்பர். பேசிட்டு வீட்டுக்குப் போய் பாருங்க"


"ரொம்ப நன்றி சார்"


"வாங்க தம்பி"


வாங்கிய வேகத்தில்.. நம்பரை உடனே டயல் செய்தான் ஜார்ஜ்.. அவரிடம் பேசினான்.. வீட்டுக்கு வருமாறு அவர் கூறவே அவரிடமே அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொண்டான். பின்னர் சுப்பிரமணியத்திடம் திரும்பிய அவன், "சார்  பேசிட்டேன்.. கோர்ட் ரோடு ஏரியாவில் உள்ள ஒரு இடத்துக்கு வாங்கன்னு சொல்லிருக்கார்.. அந்த இடத்துக்கு எப்படிப் போகணும் சார்" என்று கேட்க, அவர் எப்படிப் போக வேண்டும் என்று சொன்னதும், நன்றி சொல்லி நடையைக் கட்டினர்.


கோர்ட் ரோடுக்கு வந்தாச்சு..  ரகுநாதன் சொன்ன அட்ரஸையும் பார்த்தாச்சு. 


அது வீடு அல்ல.. ஒரு பிசினஸ் பிளேஸ் போல தெரிந்தது. அதுவும் அவருடைய பிசினஸ் இடமாக இருக்கும் போல. ஐந்து பேரையும் வரவேற்று அமர வைத்த ரகுநாதன், அனைவருக்கும் காபி கொண்டு வருமாறு இன்டர்காமில் அழைத்து  பணித்தார்.


"சொல்லுங்க.. என்ன வேணும் உங்களுக்கு"


கெளதமி பேசினாள்.


"சார் நாங்க நவீனோட பிரண்ட்ஸ், சென்னை. நவீன் கிட்ட இருந்த எந்த தொடர்பும் இல்லை. போன் போய்ட்டே இருக்குது. யாரும் எடுக்கலை.. வழக்கமா அப்படி இருக்க மாட்டான்.. பயந்துட்டோம்.. அதான் பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம். இங்கே வீடு பூட்டிக் கிடக்குது. திருவனந்தபுரம் போய்ட்டாங்கன்னு சொல்றாங்க.. உங்க கிட்ட கேட்டா தகவல் கிடைக்கும்னு வந்தோம்"


"நீங்க சொல்றது சரிதான். அவனோட அம்மைக்கு உடம்பு ரொம்ப முடியல்ல.. திருவனந்தபுரம் கூட்டிட்டுப் போயிருக்காங்க. ட்ரீட்மென்ட் போய்ட்டிருக்கு. அதுல கவனமா இருக்கான் நவீன். அதனால பேசாம இருந்திருப்பான்னு நினைக்கிறேன்"


"ஹாஸ்ப்பிட்டல் அட்ரஸ் கிடைக்குமா சார்.. நாங்க போய் பார்க்கிறோம்"


"ஸாரிம்மா.. அட்ரஸ் தரக் கூடாதுன்னு சொல்லிருக்கான். அந்த ஹாஸ்ப்பிட்டல்ல யாரையும் உள்ளே அனுமதிக்க மாடடாங்க. பேஷன்ட்டோட ஒரு அட்டென்டர் மட்டும்தான் இருக்க முடியும். அவங்களும் கூட சிகிச்சை முடியும் வரை வெளியே வர முடியாது. எல்லாமே உள்ளேயே தந்துருவாங்க. அதனால வெளில வர தேவையும் இல்லை. அதனால் அட்ரஸ் கொடுக்க முடியாத நிலையில் இருக்கேன்"


"ஆனால் ஏன் போனை அட்டெண்ட் பண்ண மாட்டேங்கிறார்னு தெரியலையே சார்.. ரிங் போகுது.. ஆனால் எடுக்க மாட்றார்"


"ஏதாவது வேலையா இருந்திருக்கலாம்மா.. இல்லாட்டி எடுக்காம இருக்க மாட்டான். நானும் டிரை பண்றேன்.. கிடைச்சா சொல்றேன். ஆமா நீங்கெல்லாம் எங்க தங்கிருக்கீங்க"


"பக்கத்துல ஹோட்டல்ல சார்.. நவீனைப் பார்த்துட்டுத்தான் போறதுன்னு முடிவு பண்ணிருக்கோம்".


"தப்பா நினைச்சுக்காதீங்க.. நவீன் இப்போதைக்கு ஊர் திரும்ப வாய்ப்பு இல்லை. சிகிச்சை முடியாம வர முடியாது. நீங்களும் அவனைப் பார்க்க முடியாது. பேசாம ஊருக்குக் கிளம்பிப் போங்க. அவன் வந்ததும் நானே உங்களுக்குத் தகவல் தர்றேன். பிறகு கூட வந்து பாருங்க. இங்கே தங்கியிருந்தால் டைம்தான் வேஸ்ட் ஆகும் உங்களுக்கு"


கெளதமி ஜார்ஜைப் பார்க்க.. ஜார்ஜ் மற்றவர்களைப் பார்க்க.. ஐந்து பேருக்கும் குழப்பம்.. என்ன செய்வது என்று புரியவில்லை..  ஜார்ஜ் ரகுநாதனிடம் திரும்பினான்..




"சார், அங்க இருந்து மெனக்கெட்டு கிளம்பி வந்திருக்கோம். நேரில் பார்க்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை. அந்த ஹாஸ்ப்பிட்டல் போன் நம்பராவது கொடுங்க.. பேசிப் பார்த்து விட்டு  கூட கிளம்பிப் போறோம். வெறும் கையுடன் கிளம்பிச் செல்ல மனசு வரலை.. எங்களோட ரொம்ப குளோஸ் பிரண்ட் அவன். அவன் கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லாமல் இருப்பது ஒரு மாதிரி இருக்கு. அதனால்தான் கிளம்பி வந்தோம். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க"


"அதுக்கு இல்ல தம்பி..  அந்த ஹாஸ்ப்பிட்டல் ரொம்ப ஸ்டிரிக்ட். நானே கூட அங்கு போன் பேச முடியாது. எந்தத் தகவலும் தர மாட்டாங்க.. நாம பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியலை.. உங்க நிலைமை எனக்கும் புரியது.. இப்படிப்பட்ட பிரண்ட்ஸ் இந்தக் காலத்தில் யாருக்கும் கிடைக்காது. ஆனால் எனக்கு வேற வழி தெரியலையே"


இதற்கு மேல் இவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.. சோர்வுடன் கிளம்பி வெளியே வந்தனர். சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. வாகனங்கள் சர் புர்ரென்று போக ஆரம்பித்திருந்தன. கெளதமி நடைப் பிணமாக காட்சி அளித்தாள்.. முகத்தில் தெளிவே இல்லை.. சுத்தமாக வெறுத்துப் போயிருந்தாள்.. நவீனுக்கு என்னாச்சு.. இதே கேள்விதான் திரும்பத் திரும்ப மனதில் ஓடிக் கொண்டிருந்தது. நடக்க முடியவில்லை அவளால், அருகில் இருந்த கடையின் படியில் அப்படியே அமர்ந்து விட்டாள். ஜார்ஜ் உள்ளிட்டோரும் அவளுக்கு அருகே வந்து நின்று விட்டனர். அனைவரும் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.


"மச்சா.. அந்த ரகுநாதன் ஏதோ நம்ம கிட்ட மறைக்கிறார்னு நினைக்கிறேன்டா" குமார் கூறியதைக் கேட்டு அனைவரும் நிமிர்ந்து பார்த்தனர்.. கெளதமிக்கு திடுக்கென்றிருந்தது.


(தொடரும்)