"நேரா போய் வலது பக்கம் திரும்புங்க.. அதுல லெப்ட் சைட்ல 5வது வீடு".. (கெளதமியின் காதல் - 6)

Su.tha Arivalagan
Jan 15, 2024,10:00 AM IST

- சுதா. அறிவழகன்


முழுசாக 5 நாள் ஓடி விட்டது. நவீனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவனைத் தொடர்பு கொள்ள கிடைத்த சில எண்களும் கூட இப்போது செயல்பாட்டில் இல்லை என்று வந்து விட்டன. கெளதமி பித்துப் பிடித்தவள் போல காணப்பட்டாள். நவீனுக்கு என்னாச்சு.. ஏன் பேச மாட்டேங்கிறான்..ஏன் போன் அட்டென்ட் பண்ணலை.. ஏன் போன்கள் செயல்படலை.. அடுக்கடுக்காக கேள்விகள் சுனாமி போல மனசை சுழற்றியடித்தன.. விடைதான் கிடைக்கவில்லை.


நவீனின் நண்பர்களும் கூட குழப்பமடைந்திருந்தனர்.. இப்படி இருக்க மாட்டானே.. ஏதாவது ஒரு ரெஸ்பான்ஸ் வந்திருக்குமே.. ஒரு நாள் எடுக்காட்டி பரவாயில்லை.. தொடர்ந்து எடுக்கலைன்னா எப்படி.. என்னாச்சு இவனுக்கு.. யாருக்கும் புரியவில்லை. அவர்களும் பல்வேறு வழிகளில் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தனர். எந்த பலனும் கிடைக்கவில்லை. அவனது செல்போனும் இப்போது ஆஃப் ஆகி விட்டது. 


ஒரு வேளை சார்ஜ் இல்லாமல் அது ஆஃப் ஆயிருக்கலாம் என்று நண்பர்கள் சந்தேகித்தனர். ஸோ, போன் இத்தனை நாட்களாக அவனிடம் இருந்திருக்காது என்றும் அவர்கள் ஊகித்தார்கள்... ஒரு வேளை போனை மிஸ் பண்ணிட்டானா.. இல்லாட்டி அவனுக்கு ஏதாவது ஆயிருச்சா.. நண்பர்களுக்கே இப்போது கிலி ஏற்பட்டது. 




இந்தக் குழப்பத்துக்கு ஒரே தீர்வு.. நேராக நாகர்கோவிலுக்கே போய் அவனை சந்திக்க முயற்சிப்பதுதான் என்று ஜார்ஜ் சொல்ல நண்பர்களும் சரி என்று ஆமோதித்தார்கள்.. அவர்களுக்கும் நவீனைப் பற்றி தெரிந்தாக வேண்டும் என்ற உணர்வு உந்தித் தள்ளியது. ஜார்ஜ் உள்பட 4 பேர் அங்கு செல்ல முடிவானது.


தாங்கள் ஊருக்குப் போவதாகவும், நவீன் குறித்த தகவலை தெரிந்து கொண்டு வருவதாகவும், ஜார்ஜ், கெளதமிக்கு போன் போட்டுச் சொன்னான்.


"அண்ணா.. நானும் வர்றேன்.. என்னையும் கூட்டிட்டுப் போங்க.. ப்ளீஸ்.. நானும் வர்றேன்"


" நீ எதுக்கும்மா அவ்வளவு தூரம் வர்றே.. நாங்க போய் பார்த்துட்டு உனக்கு போன் பண்றோம்.. நீ அமைதியா இரு"


"இல்லைண்ணா என்னால இருக்க முடியலை.. ரொம்ப பயமா இருக்கு. அவருக்கு ஏதோ ஆயிருச்சுன்னு எனக்கு தோணிட்டே இருக்கு.. நானும் வர்றேன்.. தயவு செஞ்சு கூட்டிட்டுப் போங்க ப்ளீஸ்"


கெளதமி ரொம்பக் கெஞ்சலாகவும், அழுதபடியும் கேட்டதால் ஜார்ஜுக்கு மறுக்க முடியவில்லை. 5 பேராக செல்ல முடிவெடுத்தனர். அன்று மாலையே ரயிலைப் பிடித்து காலையில் நாகர்கோவில் வந்து இறங்கினார்கள்.


வேப்பமூடு ஜங்ஷன் பகுதிக்குப் போக வேண்டும். அந்த இடத்தில்தான் நவீனின் வீடு உள்ளது.  ஒரு ஆட்டோ பிடித்து கிளம்பினர்.. சில நிமிட பயணத்துக்குப் பின்னர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு பேக்கரி கடை திறந்திருந்தது. அங்கு சென்று ஜார்ஜ் அட்ரஸைக் கூறி விசாரித்தான். 


"இப்படியே நேரா போய் வலது பக்கம் திரும்புங்க.. கேரளா வீடு மாதிரி ஒரு பெரிய வீடு இருக்கும். அந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தெரு போகும்.. அதுல லெப்ட் சைட்ல 5வது வீடு... தெருவுல நாய் இருக்கும்.. பாத்து போங்க தம்பி"


அவர் சொன்ன அட்ரஸுக்கு வந்து சேர்ந்தனர்..  கெளதமிதான் வேகமாகப் போய் கதவைத் தட்டினாள்.. அவ்வளவு பதட்டமாக இருந்தாள்.. காலிங் பெல் இருக்கா என்று பார்த்தாள், இருந்தது. அதையும் அடித்தாள். உள்ளே பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. சில நிமிடம் தொடர்ந்து காலிங் பெல் அடித்தும் கூட யாரும் வந்து திறக்கவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்தது.


பக்கத்து வீட்டில் கேட்கலாமா என்று நினைத்து அங்கு சென்றாள் கெளதமி. காலிங் பெல் அடித்ததும் ஒரு பெண் வெளியே வந்தார்.


"அம்மா நாங்க சென்னைல இருந்து வர்றோம்.. இங்க உங்க பக்கத்து வீட்டுல நவீன்னு ஒருத்தர் இருக்காரில்லையா.. அவரைப் பார்க்க வந்தோம்.. நாங்க அவரோட பிரண்ட்ஸ்.. அவங்க வீட்டில் யாரும் இல்லையா.. காலிங் பெல் அடிச்சும் கதவு திறக்கலை"


"அவங்க யாரும் இல்லை மக்ளே.. திருவனந்தபுரம் கிளம்பிப் போயிட்டாங்க.. அவங்க அம்மைக்கு உடம்பு சுகம் இல்ல.. சிகிச்சைக்காக போறதா சொன்னாங்க.. எப்ப வருவாங்கன்னு தெரியல்ல.."


அதைக் கேட்டதும் கெளதமிக்கு அயர்ச்சியாக வந்தது. இப்படி இடியை இறக்குகிறார்களே என்று குழப்பமாகி மயக்கம் வருவது போல இருந்ததால் அந்தப் பெண்ணின் வீட்டுத் திண்ணையிலேயே அப்படியே உட்கார்ந்து விட்டாள். அதைப் பார்த்து பயந்து போன அந்தப் பெண்மணி, "மோளே என்னாச்சு.. இரு குடிக்க தண்ணி கொண்டு வர்றேன்" என்று கூறியபடி உள்ளே போனார். வேகமாக போன அவர் கையில் மோருடன் வெளியே வந்தார்.


"கொஞ்சம் இப்படி உக்காரு மோளே.. இந்தா பிடி.. குடி" கையில் மோரைக் கொடுத்து தலையைத் தடவிக் கொடுத்தபடி அருகே இருந்த துண்டை எடுத்து முகத்தையும் அவர் துடைத்து விட்டார்.


மோரை வாங்கிக் குடித்த கெளதமிக்கு சற்று தெளிவு தெரிந்தது. ஆனால் மனசில் குழப்பம் அதிகரித்தது. 


"நவீன் அல்லது அவங்களோட உறவினர்கள் யாரோட செல்போன் நம்பர் இருக்குமா மேடம்"


"அது எதுவும் எங்களுக்குத் தெரியாது மோளே.. நாங்க இப்பத்தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். வந்து பத்து நாள்தான் ஆகுது.. பெருசா யாருடைய தொடர்பும் இங்கே எங்களுக்கு இல்லை.. ஆனால் அந்தப் பையனோட சித்தப்பா ஒருத்தர் இங்கே வருவார்.. அவரோட வீடு, நம்ம ராஜாஸ் மால் இருக்கு தெரியுமா.. அதுக்குப் பக்கத்தில்தான் இருக்குன்னு அந்த அம்மை சொல்லுவாங்க.. அங்க வேணும்னா போய் விசாரிச்சுப் பாருங்களேன்"


"ராஜாஸ் மால் பக்கத்துல ஏதாவது தெரு பெயர் இருக்காம்மா"


"தெரு பெயர் தெரியலை.. ஆனால் மாலுக்குப் பக்கத்தில் அவரோட கடை இருக்குதாம். அதுக்குப் பேரு கூட.. வடிவீஸ்வரன் டெக்ஸ்டைல்ஸ். அந்த இடத்துல அதான் பெரிய கடை பார்த்துக்கிடுங்க.. அந்தக் கடையில் போய்க் கேட்டா கூட கண்டுபிடிச்சரலாம்"


"ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. மோர் நல்லாருந்துச்சு.. உங்க பேச்சு அதை விட நல்லாருந்துச்சு.. நன்றிம்மா வர்றோம்".. அவரை கட்டி அணைத்துக் கொண்டாள் கெளதமி.. ஒரு வாஞ்சையான உணர்வும், ஆறுதலும் கிடைத்தது.


"நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியலை.. ஆனா பதட்டப்படாம போய்ட்டு வாங்க.. நல்லது நடக்கும்.. பொறுமையாப் போய்ப் பாருங்க.. போய்ட்டு வாங்க மோளே..".. அவரும் தட்டிக் கொடுத்தார்.


மறுபடியும் ஆட்டோ பிடித்து ராஜாஸ் மால் விரைந்தனர். பிரமாண்ட மாலுக்கு அருகே வடிவீஸ்வரன் டெக்ஸ்டைல்ஸ் எங்கிருக்கிறது என்று பார்த்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தக் கடையையும் காணோம். அருகில் திறந்திருந்த பேக்கரிக்குச் சென்று ஜார்ஜ் விசாரித்தான்.. 


"எதிர் திசையில் அந்த முனையில இருக்காம்.. வாங்க போகலாம்" என்று கூறியபடி அனைவரையும் கூட்டிக் கொண்டு ரோடைக் கிராஸ் செய்து எதிர் பக்கம் சென்றான்.. சில விநாடி நடைக்குப் பின்னர் பேக்கரிக் கடைக்காரர் காட்டிய பகுதி வந்தது.  அந்த இடத்தில் பளிச்சென கண்ணில் பட்டது வடிவீஸ்வரன் டெக்ஸ்டைல்ஸ். பெரிய கடைதான். ஆனால் கடை பூட்டிக் கிடந்தது.


"அய்யோ..என்னண்ணா கடை பூட்டிக் கிடக்குது.." அதிர்ச்சியுடன் கேட்டாள் கெளதமி.


"அட மணி என்ன இப்போ.. கடை திறக்கும் நேரம் இல்லையேம்மா இது.. நாமதான் சீக்கிரம் வந்திருக்கோம்.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம். 9 மணிக்கு மேலதானே திறப்பாங்க வழக்கமா"




அந்தப் பகுதியிலேயே ஒரு ஹோட்டலைப் பார்த்த ஜார்ஜ்.. முதலில் அங்கு போய் ரூம் போட்டு எல்லோரும் ரெஃப்ரஷ் ஆகிக்குவோம். பிறகு கடைக்கு வருவோம் என்று கூற அனைவரும் சரி என்று தலையாட்டினர். உண்மையில் எல்லோரும் டயர்டாக இருந்தனர். 


சுமாரான லாட்ஜ்தான்.. ஆனால் தற்போதைக்கு அதுவே சொர்க்கம் போல தோன்றியது.  தனது ரூமுக்கு வந்த கெளதமிக்கு எதுவும் பண்ணத் தோணலை.. அப்படியே பிளாங்க் ஆக இருந்தது. எல்லாமே அவுட் ஆப் போகஸ் ஆகத் தோன்றியது..  அப்படியே படுக்கையில் விழுந்தாள்.. 


"என்னாச்சுடா நவீன்.. எங்கே போயிட்டே.. அம்மாவுக்கு ரொம்ப முடியலையா.. அப்படின்னா நீ எனக்கு சொல்லியிருக்கலாமே.. எதுவுமே சொல்லாம அப்படி என்ன பெர்சனல் உனக்கு.. என் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பியே.. இதை மட்டும் ஏன் சொல்லலை.. என் கிட்ட சொல்லனும்ணு ஏன் உனக்குத் தோணலை.. அப்படி என்னதான் ஆச்சு உனக்கு.. என்னிடம் கூட பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன சிக்கலில் மாட்டிருக்கே.. எனக்கு முடியலியே.. எல்லாமே வெறுப்பா இருக்கு.. சூனியமா இருக்கு, ஒன்னுமே புரியலை.. எதுவுமே ஓடலை.. செத்துப் போயிரலாம்னு இருக்கு.. நீ இல்லாட்டி நான் இல்லியே.. என்னைத் தவிக்க விட்டுட்டு எங்கடா போன"... கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய விம்ம ஆரம்பித்தாள் கெளதமி.. அறையில் நிசப்தம்.. மனதில் புயல்.. கெளதமியின் அழுகையால் அந்த அறையில் சோகம் சூழ்ந்தது!


(தொடரும்)