"எனக்குள்ள.. நவீன் மீதான காதல் இன்னும் கூட அப்படியேதான் இருக்கு கெளதமி"... (கெளதமியின் காதல் -19)

Su.tha Arivalagan
Apr 15, 2024,08:20 PM IST

- சுதா. அறிவழகன்


கெளதமி சொல்லிக் கொண்டே போய் மெல்லிய புன்னகையுடன் நிறுத்தியபோது படக்கென்று திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பாரு.


"உண்மைதான் கெளதமி.. பட்.. இதெல்லாம் தெரிஞ்சுமா என்னோட நீ இவ்வளவு இயல்பா பேசறே, பழகறே.. ஆச்சரியமா இருக்குடி"


"இதுல என்னடி தப்பு இருக்கு.. எத்தனையோ பேர் நம்மைக் காதலிக்கலாம்.. நாம  சிலரை விரும்பலாம்.. இதெல்லாம் ஒன் வேயா இருக்கும்போது அதுக்கு யாரும் பொறுப்பாக முடியாது.. அதைத் தப்புன்னும் சொல்ல முடியாதே.. உனக்குப் பிடிச்சிருந்தது.. அதை அவன் கிட்ட சொல்லிருக்கே.. பட் அதை அவன் ஏத்துக்கலை.. அத்தோட நீயும் விட்டுட்ட.. அவனும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டான்.. இரண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸா இருக்கீங்க.. எனக்கு நல்ல பிரண்டா இருக்கே.. இது உண்மையில் எனக்கு பெருமையாவும், மகிழ்ச்சியாவும்தான் இருக்கு.. ஸோ, இதை நான் தப்பா பார்க்கலே.. உன்னையும் வித்தியாசமா பார்க்கலை"


"கிரேட் கெளதமி.. பட் எனக்குள்ள இப்ப வரைக்கும் அந்தக் காதல் இருக்கு.. இப்படி சொல்றதுக்காக என்னை தப்பா நினைக்காதே.. வித்தியாசமா பார்க்காதே.. எனக்கு அவனை இப்ப வரைக்கும் பிடிக்கும்.. உன்னை அவன் உயிருக்கு  உயிரா நேசிக்கிறான்னு தெரிஞ்சும் கூட அந்த காதலை நான் விடலை.. காரணம், அது என்னோட உணர்வு.. என்னோட காதல்.. அதை நான் எனக்குள்ள வச்சுக்க எனக்கு உரிமை இருக்குன்னு நான் நினைக்கிறேன்.. அதனாலதான் அதை கைவிடாம  அப்படியே நினைச்சு நினைச்சு ரசிச்சுட்டிருக்கேன்"


"இது வித்தியாசமா இருக்கே பாரு"


"கண்டிப்பா வித்தியாசமாதான் இருக்கும், ஏன் தப்பா கூட தோணும்.. பட்.. நல்லா யோசிச்சுப் பாரு.. அது என்னோட காதல் இல்லையா.. அதை எப்படி நான் விட முடியும்.. எதுக்கு விடணும்.. நான்  அத்துமீறினால்தானே தப்பாக இருக்கும். நான்தான் அப்படி பண்ணலையே.. நவீனையும் நான் டிஸ்டர்ப் பண்ணலை.. உனக்கும் குறுக்கே வரலை.. வரவும் மாட்டேன்.. எனக்குள்ளதானே பொதைச்சு வச்சிருக்கேன்.. ஸோ, நீ தப்பா எடுத்துக்க வேண்டாம்.. டென்ஷனாகவும் வேண்டாம்.. ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்"




"இட்ஸ் ஓகே.. நாம வேற மாதிரி பேச ஆரம்பிச்சுட்டோம்னு நினைக்கிறேன்.. நவீனை சீக்கிரம் தேடி கண்டுபிடிக்கணும்.. கடந்து போற ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நரகமா இருக்கு.. என்னால முடியலை.. என்னோட வாழ்க்கைல நான் சந்திச்ச மிகப் பெரிய சந்தோஷம் நவீன்தான்.. அந்த உலகத்துல நான் அப்படியே கரைஞ்சு போயிட்டேன்.. அதுல இருந்து என்னைப் பிரிச்சு எடுக்கிறது ரொம்பக் கஷ்டம்.. இப்படியெல்லாம் ஒருத்தரை காதலிக்க முடியுமான்னு எனக்குத் தெரியலை.. ஆனா நான் அப்படித்தான் காதலிக்கிறேன்.. என்னை கிரின்ஞ்னு சொல்லலாம், லூசுன்னு கூட சொல்லிக்கட்டும்.. ஐ டோன்ட் கேர்..  என்னோட எத்தனையோ கவலைகளை, ஏக்கங்களை, கஷ்டங்களை, வருத்தங்களை, விரக்திகளை, ஏமாற்றங்களை மறைய வச்சவன் நவீன்.


முதல் முறை அவனை சந்திக்கிற வரைக்கும் எனக்குள்ள நிறைய தலைக்கனம் இருந்தது.. ஆனால் அவனைப் பார்த்த நொடியிலிருந்து அத்தனை கர்வமும் என்னை விட்டுப் போய்ருச்சு.. அவனைப் பார்த்ததும் எனக்கு வந்தது காதல்னு சொல்ல முடியாது.. அது ஒரு ஆறுதல்.. வறண்டு போய்க் கிடந்த மனசுல ஒரு வெள்ளம் போல பாய்ந்து வந்தவன் நவீன்.. என்னோட அத்தனை மன வறட்சியையும் அவனோட அந்த அழகான சிரிப்பும், அனுசரணையான பார்வையும், அன்பான பேச்சும், அப்படியே போக்கிருச்சு.


எனக்கு சின்ன வயசுல இருந்து நான் நினைச்சது பெரும்பாலும் நடந்ததில்லை. கேட்டது கிடைச்சதில்லை.. ஏதாவது பண்ணனும்னு நினைப்பேன்.. ஆனால் அது கை கூடாம போய்ரும்.. ஆனால் நவீன் வந்த பிறகு எனக்குள்ள ஒரு பெர்சன்ட் கூட ஏமாற்றம் வந்தது இல்லை.. எப்பவும் ஒரு கரம், நம்மை அரவணைச்சுட்டே இருக்கும்னு ஒரு மிகப் பெரிய நம்பிக்கையை அவன் கொடுத்தான்.. அந்த நம்பிக்கைதான் என்னோட உயிரை அப்படியே புரட்டிப் போட்டுச்சு.. இவன் இருக்கான்.. இவன் எனக்கானவன், என்னை மீட்க வந்தவன்னு அப்படி ஒரு சந்தோஷம், நிம்மதி.. நவீன் மேல நான் வச்சிருக்கிறது வெறும் காதல் மட்டும் இல்லை பாரு.. பக்தி.. அதையெல்லாம் வார்த்தைல விவரிக்க முடியாது.


நான் கூட அவன் கிட்ட கேட்டேன் ஒரு வாட்டி.. உன்னை இத்தனை பேர் காதலிச்சிருக்காங்களே.. நீ ஏன் எதையும் ஏத்துக்கலை.. என்னைப் போய் ஏன் செலக்ட் பண்ண.. அப்படி என்ன நான் பிரமாதமான அழகியா.. இல்லையே அப்படின்னு கேட்டப்போ, அவன் சொன்ன வார்த்தை என்னை அப்படியே ஆஃப் பண்ணிருச்சு.. எல்லோரும் அழகிதான், அறிவாளிகள்தான், உன்னை விட பல விதங்களில் பெஸ்ட்டும் கூடத்தான்.. ஆனால் யாரிடமும் என்னோட மனசு ஒட்டலையே.. உன் கிட்ட மட்டும்தான் என்னோட உசுரோட வாசனையை நான் உணர முடிஞ்சுச்சு.. இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது கெளதமி, அது முடிவு பண்றது அப்படின்னு சொன்னான். 


நிறையப் பேர் சொல்வாங்க.. உனக்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்னு. ஆனால் நான் சொல்லவே மாட்டேன்.. நான் நிச்சயம் நவீனுக்காக உயிரை விட மாட்டேன்.. நான் நவீனுடன் வாழப் பிறந்தவ.. வாழணும்.. வாழ்வேன்.. ஒரு நிறைஞ்ச வாழ்க்கையை அவன் கூட நான் வாழணும்.. அப்பதான் என்னோட பிறப்பு பூர்த்தியாகும்.. நிச்சயம், நவீன் வருவான், எனக்காக வருவான்.. நாங்க வாழ்வோம்.. அந்த ஒரு நம்பிக்கை மட்டும்தான் என்னோட உயிரைப் பிடிச்சு வச்சிருக்கு பாரு" நீளமாக பேசியதால் மூச்சு வாங்கியது கெளதமிக்கு.. பார்வதி அருகே வந்து அவளைக் கட்டிப்பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்.. கெளதமியால் தொடர்ந்து பேச முடியவில்லை.. கண்ணீர்தான் கண்களிலிருந்து வழிந்தோடியது. அவளது கண்களைத் துடைத்து விட்ட பாரு, இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். மேலும் கீழும் மூச்சு வாங்கியபடி, கண்களை மூடி விம்மிய கெளதமி மீது பாருவின் ஆழமான பார்வை அழுத்தமாக படிந்து மீண்டது.


"நிச்சயம் அவன் கிடைப்பான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீயும் அவனும் சந்தோஷமா வாழப் போறதை நான் பார்த்து மகிழத்தான் போறேன்.. ரிலாக்ஸ்டா இரு.. மொதல்ல இந்த தடியனுங்க எங்க இருக்காங்கன்னு போன் பண்ணலாம்"


"அதைப் பண்ணு.. நான் டீ சொல்றேன்.. எனக்கு தலையை வலிக்கிற மாதிரி இருக்கு".. கண்களைத் துடைத்தபடி எழுந்தாள் கெளதமி.. பார்வதி செல்லைக் கையில் எடுத்து ஜார்ஜ் நம்பரை அழுத்தினாள்.


மறுமுனையில் ஜார்ஜ் எண் பிசி என்று வந்தது. கட் செய்தாள் பாரு.. சில நிமிடங்களில் ஜார்ஜே கால் செய்தான்.


"எங்கடா இருக்கீங்க"


"......"


"ஓ.. எப்போ வருவீங்க.. பிராப்ளம் ஏதும் இல்லையே"


"......"


"ஓ.. ஓகே.. சரி, பார்த்து வாங்க"




"என்னாச்சுடி பாரு.. எங்க இருக்காங்களாம்"


"வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட்டாம்.. இவங்க கார் மேல ஏதோ ஒரு வேன் மோதுற மாதிரி வந்துருக்கு போல.. நல்ல வேளையா டிரைவர் காரை சட்டுன்னு திருப்பி தப்பிச்சுருக்கார்.. திருப்புனுதல, ரோட்டோரமா இருந்த டூவீலர் மீது கார் மோதி அது லேசா டேமேஜ் ஆயிருச்சாம்.. வேன் நிக்காம போயிருச்சாம்"


"வேன் மோத வந்துச்சா.. பிரேக் பிடிக்காம மோதிருக்குமா.. இல்லாட்டி வேணும்னே வந்திருக்குமா"


"தெரியலை.. பட் வேணும்னு வந்த மாதிரி தெரியலைன்னு ஜார்ஜ் சொல்றான்.. பட் அவனுக்குமே டவுட் இருக்கிற மாதிரிதான் டோன்ல தெரியுது"


"இப்போ எங்கே இருக்காங்களாம்"


"அதைச் சொல்லலை.. பட் பக்கத்துலதான் இருக்கோம்.. ரோட்டோரமா காரை வேகமாக திருப்புனதுல.. பிரேக் வயர் வேற ஏதோ கட் ஆயிருக்கு போல.. அதை மெக்கானிக் வச்சு சரி பண்ணிட்டிருக்காங்களாம்.. டூவீலர்க்காரன் காசு கேக்கறானாம்.. சரி பண்ணிட்டு கிளம்பி வந்துருவோம்னு சொல்றான்"


"என்னடி இது.. அடுத்தடுத்து ஏதாவது வந்துட்டே இருக்கு"


"எனக்கும் புரியலை.. பட் ஏதோ ஒரு முடிவை நோக்கி நாமெல்லாம் போயிட்டிருக்கோம்னு மட்டும் தெரியுது"


"ஏன்டி நீ வேற அபசகுணமா பேசறே"


கெளதமியின் செல் சிணுங்கியது.. புது நம்பர்.. எடுத்து காதில் வைத்தாள்.


"ஹலோ"


"நான் நவீன் அம்மா பேசறேன் கெளதமி.. எங்கே இருக்கே"


(தொடரும்)