"இரு இரு.. இந்தக் கதையில் இவன் ஹீரோவா இல்லை வில்லனா?".. (கெளதமியின் காதல் -16)
- சுதா. அறிவழகன்
"என்னடா இது.."
ஜார்ஜைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டான் குமார்.
"என்னாச்சுடா.. எப்படி இறந்தார்.. காலைல கூட நம்ம கூட பேசினாரே"
"என்னாச்சுன்னு தெரியலையே.. அவரோட வீட்டுக்கே போய் விசாரிச்சுப் பார்த்துடலாம்.. சேட்டா.. வண்டியை கிளப்புங்க.. அட்ரஸ் சொல்றேன்.. அங்க போகலாம்"
மீண்டும் நாராயணன் எண்ணுக்குப் போன் செய்த குமார், நாராயணன் வீட்டு அட்ரஸை கேட்டு வாங்கிக் கொண்டான். குமார் மேப் போட்டு கைடு பண்ண, கார் விரைந்து ஓடத் தொடங்கியது. மேற்கொண்டு கால் மணி நேரம் சென்ற பின்னர் ஒரு அழகான தோப்புக்குள் இருந்த நாராயணன் வீட்டை சென்றடைந்தது கார்.
வீட்டின் முன்பு உறவினர்கள், நண்பர்கள் என சிலர் குழுமியிருந்தனர். பெரிய கூட்டம் இல்லை.. இனிமேல் வருவார்கள் போல.. காரை சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டு, டிரைவரிடம் வெயிட் பண்ணுமாறி கூறிய பின்னர் குமாரும், ஜார்ஜும் வீட்டை நோக்கி நடந்தனர்.
வீட்டுக்கு வெளியே நின்றிருந்த ஒருவரை அணுகிய குமார், நாராயணன் எப்படி இறந்தார் என்று விசாரித்தான். சிறிது நேரம் அவரிடம் பேசிய பின்னர் அவரது குடும்பத்தார் எங்கே என்று கேட்டான். அதற்கு அந்த நபர், நான் அவருடைய பையன்தான் என்று கூறவே, குமார், ஜார்ஜை திரும்பிப் பார்த்தான். பிறகு அந்த நபரை தனியே வருமாறு கூறி அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.
"சேட்டா.. நாங்க சென்னைல இருந்து வர்றோம்.. ஒரு முக்கியமான விஷயமாக நாராயணனிடம் பேசியிருந்தோம். அவர்தான் வீட்டுக்கு வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னார். ஆனால் அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவம் நடந்தது ரொம்ப வருத்தமா இருக்கு.. ஸாரி.. உங்க கிட்ட எங்களைப் பத்து ஏதாவது சொல்லியிருந்தாரா.. ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்தார்.. வீட்ல ஏதாவது பிரச்சினையா"
"ஓ.. நீங்கதானா அது.. உங்களைப் பத்தித்தான் காலைல பேசிட்டிருந்தார். ரெண்டு பேர் வர்றாங்க.. அவங்களுக்கு ஒரு பிரச்சினை. அதை நாம சரி செய்து கொடுக்கணும்,, பாவம் அவங்கன்னு சொல்லிட்டிருந்தார். பக்கத்துல ஒரு கிராமம் இருக்கு.. அங்க உங்களைக் கூட்டிட்டுப் போகணும்னு சொல்லிட்டிருந்தார்.. குளிச்சு ரெடியாயிட்டிருந்தப்பதான் ஒரு போன் வந்தது. அதில் யார் பேசினாங்கன்னு தெரியலை.. பேசி முடிச்ச பிறகு ரொம்ப குழப்பமா, அதிர்ச்சியா இருந்தார். நான் கூட கேட்டேன்.. என்னாச்சுன்னு.. ஒன்னும் இல்லைன்னு சொல்லி சமாளிச்சுட்டு கடைக்குப் போனார். போயிட்டு வந்தவர் ரூமுக்குள்ள போய் படுத்துட்டார்.. சரி சும்மா படுத்திருக்கார்னு நாங்க நினைச்சோம். ஆனால் கொஞ்ச நேரத்துல கதவைப் பூட்டிட்டு தூக்குப் போட்டுக்கிட்டார். என்னோட தங்கைதான் பார்த்து அலறினா.. அதுக்குப் பிறகுதான் நாங்கெல்லாம் ஓடி வந்தோம்"
"போன்ல பேசுனது யாருன்னு தெரியுமா.. அது யாருன்னு பார்த்தீங்களா"
"தெரியலங்க.. ரெஞ்சித்-னு பேர் சேவ் பண்ணி வச்சிருந்தார் அப்பா.."
"அந்த நபரோட நம்பர் கொஞ்சம் தர முடியுமா"
"அது உங்களுக்கு எப்படி உதவும்னு நினைக்கறீங்க"
"தெரியலை சேட்டா.. ஆனால் நாங்க உங்க அப்பாவைப் பார்க்க வந்ததுக்கும், இந்த நம்பரிலிருந்து பேசிய நபருக்கும் தொடர்பு இருக்குமோன்னு ஒரு டவுட்.. அதான் நாங்க அந்த நம்பரில் பேசிப் பார்க்கலாம்னு நினைக்கிறோம்.. கொஞ்சம் சொல்ல முடியுமா. ப்ளீஸ்"
"இருங்க தர்றேன்.. வெயிட் பண்ணுங்க.. அப்பா போனை எடுத்துட்டு வர்றேன்"
வீட்டுக்குள் அந்த நபர் செல்ல.. ஜார்ஜும், குமாரும் ஒருவரை ஒருவர் விரக்தியுடன் பார்த்துக் கொண்டனர்.. உள்ளே போன நாராயணன் மகன் அதே வேகத்தில் திரும்பி வந்தார். கையில் செல்போன்.
"இதான் அந்த நம்பர்"
"சொல்லுங்க சேட்டா"
நாராயணன் மகன் நம்பரைச் சொல்லச் சொல்ல அதை கீபேடில் அழுத்திக் கொண்டே வந்தான் குமார்.. 6 நம்பர்கள் அடித்ததுமே அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அது நவீன் நம்பர்!
"சேட்டா என்ன பேர்ல இந்த நம்பர் சேவ் ஆயிருக்குன்னு சொன்னீங்க"
"ரெஞ்சித்"
குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.. தலை சுற்றுவது போல இருந்தது. வியர்த்துப் போன முகத்துடன் ஜார்ஜிடம் திரும்பிய அவன், "டேய் இது நவீன் நம்பர்.. ஆனால் ரெஞ்சித்னு, நாராயணன் நம்பரை சேவ் பண்ணிருக்கார்.. ஒன்னும் புரியலியே".. என்று பதட்டத்துடன் பேசினான்.
ஜார்ஜுக்கும் ஒன்றும் புரியவில்லை.
"சேட்டா கொஞ்சம் போனை கொடுக்க முடியுமா.. பார்த்துட்டு தர்றோம்.. ப்ளீஸ்"
"நீங்க ஏதோ பிரச்சினைல இருக்கீங்கன்னு தெரியுது.. ஒன்னும் பிரஷ்னம் இல்லா.. இந்தாங்க" என்று போனை நீட்டினார் நாராயணன் மகன்.
போனை வாங்கிய ஜார்ஜ் அந்த நம்பருக்கு இதற்கு முன்பு போன் செய்த, அந்த நம்பரிலிருந்து வந்த கால்கள் குறித்து அறிய கால் ஹிஸ்டரியை நோண்டினான்.. அடிக்கடி அந்த நம்பருக்கு நாராயணன் பேசியிருக்கிறார். அதேபோல அவருக்கும் அதே நம்பரிலிருந்து பலமுறை போன் வந்துள்ளது.
மண்டை காய்வது போல இருந்தது ஜார்ஜுக்கும், குமாருக்கும்.. என்ன செய்வது என்று புரியாமல் விழித்த ஜார்ஜ் உடனடியாக அந்த நம்பருக்கு நாராயணன் போனிலிருந்தே கால் செய்தான்.
மறு முனையில் ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. முழுசாக போய் விட்டு கட் ஆனது.
"குமார்.. ஏதோ குழப்பமா இருக்கு.. நவீன் நம்பரை ஏன் ரெஞ்சித்னு சேவ் பண்ணனும்.. இந்த நம்பரிலிருந்து அடிக்கடி போன் வந்திருக்கு, போயிருக்கு.. பேசியது நவீனா அல்லது உண்மையிலேயே ரெஞ்சித்னு யாராவது இருக்காங்களா.. அப்படி இருந்தா அவங்க ஏன் நவீன் நம்பரை பயன்படுத்தணும்.. இல்லை நவீன்தான் ரெஞ்சித்தா.. தலையை சுத்துதே"
"எனக்கும் குழப்பமா இருக்கு.. சேட்டா.. நீங்க அப்பா இறந்ததும் இந்த நம்பருக்கு பேசினீங்களா.. அதாவது அவர் இறந்துட்டார்னு தகவல் கொடுக்கவோ அல்லது அவங்க என்ன பேசினாங்கன்னு கேக்கவோ போன் செய்தீங்களா.. இந்த நம்பரிலிருந்தோ அல்லது உங்க நம்பரிலிருந்தோ"
"இல்லை சாரே.. நான் பண்ணலை.. எங்களுக்கு அப்பா இறந்த அதிர்ச்சிதான் பெரிசா இருந்தது. அதனால் பண்ணலை.. இது யாரானு சாரே.. உங்களுக்கு தெரியுமோ"
"நாங்க யாரைத் தேடிட்டிருக்கோமோ.. அவனோட நம்பர்தான் இது சேட்டா.. ஆனால் அவன் பேரு நவீன். உங்க அப்பா இதுல ரெஞ்சித்னு சேவ் பண்ணி வச்சிருக்கார்.. அதான் குழப்பமா இருக்கு.. சரி நம்பருக்கு டயல் பண்ணா, ஆள் யாருன்னு கண்டுபிடிச்சிரலாமேன்னுதான் பண்ணேன்.. பட் அந்தப் பக்கம் ரிங் போகுது, யாரும் எடுக்கலை"
"ஓ எனிக்கும் மனசிலாகலல்லா சாரே.. சரி நீங்க வெயிட் பண்ணுங்க சாரே.. ஞான் இப்போ வரும்"
காரியத்தைக் கவனிக்க நாராயணன் மகன் உள்ளே செல்ல.. குமாரும், ஜார்ஜும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த கல்லில் அமர்ந்தனர்.
"என்னடா நடக்குது.. நவீன் ஹீரோவா இல்லை வில்லனா.. இல்லை சைக்கோவா... யார்டா அவன்.. அவன் நம்பர் ஏன்டா இந்தாளு போன்ல வேற பேருல இருக்கு.. ரொம்ப குழப்பமா இருக்கே"
"எனக்கும் புரியலை.. பட்.. சம்திங் ராங்.."
இப்போது ஜார்ஜின் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ஏதாவது புரமோஷனல் மெசேஜாக இருக்கும் என்று அசூயையாக பார்த்த ஜார்ஜ் ஷாக்கானான்.. நவீனிடமிருந்து மெசேஜ்!!
"PL LEAVE KERALA AS SOON AS POSSIBLE. ITS GOOD FOR YOU ALL. PLEASE MOVE"
"குமார் இங்க பாரு"
மெசேஜை வாங்கிப் பார்த்த குமாருக்கும் அதிர்ச்சி.. "மச்சா.. இதுக்கு மேல நாம ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஏதோ பெரிய தப்பா நடக்குது.. போலீஸுக்குப் போய்டலாமா"
ஜார்ஜுக்கும் அதே யோசனைதான் இப்போது வந்தது. ஏதோ சாதாரணமாக நினைத்த விஷயம், விபரீதமாக போய்க் கொண்டிருப்பது போல உணர்ந்தான்.
"இரு பார்வதிக்கு முதல்ல கால் பண்றேன்ட.. டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவெடுப்போம்"
சொன்ன வேகத்தில் பார்வதிக்கு கால் செய்தான். 3வது ரிங்கிலேயே காலை எடுத்தாள் பார்வதி.
"ஏன்டா எங்க இருக்கீங்க.. இங்க பெரிய வெளக்கெண்ணெய் மாதிரி பேசிட்டு போனீங்க.. ஒரு தகவலையும் காணோம்.. என்னாச்சு"
"இரும்மா.. இரும்மா.. இங்க என்னென்னமோ நடந்து போச்சு.. அந்த நாராயணன் செத்துப் போயிட்டாரு.. சூசைட்.. ஏன்னு தெரியலை.. சாகறதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஒரு போன் வந்திருக்கு...." என்று முழுக் கதையையும் சொல்லி முடித்தான் ஜார்ஜ்.
"இப்ப என்ன பண்ணலாம்.. போலீஸுக்குப் போகலாம்னு குமார் சொல்றான்.. நீ என்ன நினைக்கிறே"
"எனக்கு தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு.. அப்படீன்னா நவீன் நல்லாதான் இருக்கானா.. இருந்தா ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடணும்.. போலீஸுக்குப் போனா.. இன்னும் சிக்கலாய்ருச்சுன்னா என்ன பண்றது.."
"எங்களுக்கும் அதே குழப்பம்தான்.. ஆனால் இதுக்கு என்னதான் முடிவு.. எந்தப் பக்கம் போனாலும் முட்டுக்கட்டையா வருதே"
ஜார்ஜ், குமாரின் குழப்பம் இப்போது பார்வதியையும் தொற்றிக் கொள்ள மூன்று பேரின் மனதிலும் முதல் முறையாக பெரிய தொய்வு வந்து அமர்ந்தது..
"ஹலோண்ணா.. எனக்கு ஒரு ஐடியா தோணுது.. அதை செஞ்சு பார்க்கலாமா".. கெளதமியின் குரலைக் கேட்டு நிமிர்ந்த ஜார்ஜ், அவள் சொல்லச் சொல்ல முகத்தில் தெளிவு வந்தது.
(தொடரும்)