"எனக்கும் அப்படித்தான் தெரியுது.. பட்.. என்ன மேட்டர் சொல்லிருப்பாங்க".. (கெளதமியின் காதல் -14)
- சுதா. அறிவழகன்
முதலில் சுதாரித்தவள் பார்வதிதான்.. ஒரு கையால் கெளதமியைத் தாங்கிப் பிடித்த அவள், மறு கையால், டக்கென்று கெளதமியிடமிருந்து செல்லைப் பிடுங்கி காதில் வைத்து "ஹலோ" என்றாள். மறுமுனையில் ஏற்கனவே லைன் கட்டாகியிருந்தது.
"யாருன்னு தெரியலியே.. முதல்ல இவளை ரூமுக்குள் கூட்டிட்டுப் போ.. ரிலாக்ஸ் பண்ணு" என்று சொல்லியபடி லக்கேஜ்களை உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தனர் ஜார்ஜும், குமாரும். பார்வதியை கைத்தாங்கலாக உள்ளே கூட்டிச் சென்று படுக்கையில் கிடத்தினாள் பார்வதி.
"ஏசி போட வேண்டாம்.. ஃபேன் போடு.. ஜன்னலை முதல்ல திறந்து விடு" என்று பார்வதி கூற, குமார் ஃபேனை ஆன் செய்து விட்டு ஜன்னல்களை நன்றாக திறந்து விட்டான். சற்று வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருந்தது.
கெளதமி படுக்கையில் கிடக்க ஆளுக்கு ஒரு திசையில் உட்கார்ந்தும், நின்றபடியும் காத்திருந்தனர் மற்ற மூவரும். வந்து இறங்கக் கூட இல்லை.. அதுக்குள்ள போன் .. யாரா இருக்கும்.. நகத்தைக் கடித்தபடி குழப்பமான சிந்தனையில் மூழ்கிக் கிடந்தனர் மூன்று பேரும்.
கெளதமியிடம் அசைவு தெரிந்தது. மெல்ல சிணுங்கல் ஒலி வரவே, பார்வதி வேகமாக அருகில் சென்று அவளது நெற்றியைத் தடவியபடி, "கெளதமி.." என்று அழைத்தாள். மெல்லக் கண் திறந்து பார்த்த கெளதமிக்கு இன்னும் மயக்கம் முழுமையாக தெளியவில்லை. முனகலாகத்தான் அவளது குரல் வந்தது.. அந்த முனகலிலும் கூட அவள் உச்சரித்த வார்த்தை "நவீன்".
அருகே அமர்ந்து, அவளது தலையைத் தூக்கி தனது மார்பில் சாய்த்தபடி அரவணைப்புடன் தட்டிக் கொடுத்தாள் பார்வதி. தனது தோழி இப்படி கஷ்டப்படுவதைப் பார்த்த பார்வதிக்கு அழுகை வந்தது. கண்ணீரை அடக்கியபடி கெளதமியின் காதுக்கு அருகே கிசுகிசுப்பான குரலில், ஒன்னும் ஆகலை.. யாருக்கும் எதுவும் ஆகாது, ரிலாக்ஸ்டா இரு.. நாங்கெல்லாம் கூடவே இருக்கோம்.. தைரியமா இரு.. அப்புறம் பேசிக்கலாம் என்று கூறி இறுக அணைத்துக் கொண்டாள்.
கெளதமியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டவே, பார்வதி அவளது கண்களைத் துடைத்து விட்டபடி இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். ஜார்ஜை நோக்கி, "நீங்க போய் ரெப்ரஷ் ஆகுங்க.. நான் இவ நார்மலானப்புறம் கூப்பிடறேன்.. நீங்களும் டயர்டா இருப்பீங்களே" என்று கூற ஜார்ஜும், குமாரும் மெல்ல தலையாட்டியபடி தங்களது ரூமுக்கு கிளம்பினர்.
கதவை மூடியபடி வெளியே வந்த ஜார்ஜ் "டேய் முதல்ல ரூமுல போய் இந்த லக்கேஜை வைச்சுட்டு லாக் பண்ணிட்டு வா, பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்சம் வெளில போய்ட்டு வரலாம்" என்று சாவியை குமாரிடம் நீட்டினான். அவன் லக்கேஜை தள்ளிக் கொண்டு போய் ரூமில் போட்டு விட்டு கதவை மூடிவிட்டு வெளியே வந்தான்.
வெளியில் குளிர்ந்த காற்று முகத்தில் வந்து மோதியது. எத்தனை ரம்மியமான கிளைமேட்.. ஆனால் அதை ரசிக்கும் மன நிலையில் யாருமே இல்லையே.. என்னடா ஆச்சு நவீன் உனக்கு.. எல்லோரும் சேர்ந்து வந்திருந்தால் இந்த டிரிப் சொர்க்கமாக இருந்திருக்குமே என்று மனசுக்குள் வெறுத்தபடி கூறிக் கொண்டான் ஜார்ஜ்.
அருகில் ஒரு டீக்கடை தெரிய.. இருவரும் அங்கு போனார்கள். "வற டீ" சொல்லி விட்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்து ரிலாக்ஸ் ஆக முயன்றார்கள்.
"போன்ல யாரா இருக்கும்.. பேசினதைக் கேட்டு மயங்கி விழற அளவுக்கு அப்படி யாரா இருக்கும்"
"தெரியலையேடா.. நம்ம கிட்ட ஏற்கனவே பேசின நபர்களில் யாராவது ஒருத்தராதான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்"
"எனக்கும் அப்படித்தான் தெரியுது.. பட்.. என்ன மேட்டர் சொல்லிருப்பாங்க.. அது தெரியலையே.. கெளதமி சொன்னாதான் தெரியும்"
"சரி இப்ப நம்ம பிளான் என்ன.. திருவனந்தபுரம் வந்தாச்சு.. அடுத்து என்ன பண்ணப் போறோம்"
"அந்த நாராயணனைப் பிடிக்கணும்.. அந்த கேரக்டரை நேரில் பார்த்தாதான் அடுத்தடுத்து நாம மூவ் பண்ண ஏதாவது ரூட் கிடைக்கும்.. ஸோ.. நம்மளோட பர்ஸ்ட் டார்கெட் நாராயணன்"
"டன்.. அவனுக்கு இப்ப போன் பண்ணலாமா"
"முதல்ல அதைச் செய்.. இங்கேயே பேசிட்டு ரூமுக்குப் போலாம்.. அவங்க முன்னாடி போய் பேசினா.. இன்னும் டென்ஷன் ஆவா கெளதமி"
"எஸ்.. இரு கால் பண்றேன்"
நாராயணன் நம்பருக்கு குமார் கால் செய்தான்.. ரிங் போய்க் கொண்டிருந்தது.. ஃபுல் ரிங் போகும் வரை காத்திருந்தான் குமார். முழுமையாக போய் கட் ஆனது.
"ரிங் போகுது.. யாரும் எடுக்கலை"
"டிரை அகெய்ன்"
ரீ டயல் செய்தான் குமார். இப்போதும் ஃபுல் ரிங் போனது.
"கொய்யால.. எடுக்க மாட்டாங்குறானே"
"சரி விடு ஏதாவது வேலையா இருப்பானா இருக்கும்.. இல்லாட்டி போன் பக்கத்துல இல்லாம இருக்கலாம்.. கொஞ்சம் விட்டுப் பண்ணலாம்"
டீக்கடைக்காரரிடம் காசைக் கொடுத்த குமார் அவரிடம், "எப்பவும் இப்படித்தான் கிளைமேட் இருக்குமா சேட்டா" என்று கேட்க, அவரோ, "அங்கனயில்லா.. இது சீசனானு" என்று பதிலளித்தார். அவரிடம், அப்படியே கொஞ்சம் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு கிளம்பினர். அப்போது குமாரைக் கூப்பிட்ட கடைக்காரர், "பொதுஸ்லத்து புகவலிக்கருது.. கேரள போலீஸ் நிங்கள்க்கு பிழ சுமத்தும்" (பொது இடத்தில் தம் அடிக்காதீங்க.. போலீஸ் பார்த்தா ஃபைன் போட்ரும்)" என்று அட்வைஸ் தர, "தேங்க்ஸ் சேட்டா" என்று சொல்லியடி கிளம்பினர்.
ஹோட்டலை நெருங்கும் நேரத்தில் குமார் செல் சிணுங்கியது.
நாராயணன்!
"ஹலோ.. நாராயணன்.. நாங்க திருவனந்தபுரம் வந்துட்டோம்"
"------"
"ஆமா.. நீங்க எங்கே இருக்கீங்க"
"-------"
"அப்படியா.. இங்க இருந்து எவ்ளோ தூரம் அந்த இடம்"
"------"
"சரி.. நீங்க எவ்வளவு நேரம் இருப்பீங்க"
"------"
"ஓகே.. அப்ப அங்கேயே இருங்க.. நாங்க கொஞ்ச நேரத்துல கிளம்பி வர்றோம்.. நானும் என் பிரண்டும் மட்டும் வர்றோம்.. லேடீஸ் கூட்டிட்டு வரலை"
"----------------"
"ஓகே சேட்டா.. கிளம்பிட்டு கால் பண்றோம்"
"ஜார்ஜ்.. இந்தாளு வலியவிள அப்படிங்கிற இடத்துல இருக்கானாம்.. அவங்க வர முடியுமான்னு கேக்குறான்.. அங்க இருந்து இன்னொரு இடத்துக்குப் போகணும்.. நீங்க தனியா போக முடியாது.. நான் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றான்"
"வலியவிள திருவனந்தபுரம்தானா"
"திருவனந்தபுரத்துக்குப் பக்கம்தானாம்.. கொஞ்சம் அவுட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்"
"சரி அங்கிருந்து எந்த இடத்துக்குப் போகணும்னு சொன்னான்.. பேரு ஏதாவது சொன்னானா.. நவீன் பத்தி ஏதாவது.."
"அதெல்லாம் சொல்லலை.. அவன் இருக்கும் இடத்துக்கு மேலதான் இன்னொரு இடத்துக்குப் போகணுமாம். அதனாலதான் நம்மளை அங்க வரச் சொல்றான்.. நவீன் பத்தி பேசலையே"
"சரி அவன் இழுக்கிற இழுப்புக்குத்தான் இப்ப நாம போயாகணும்.. வேற வழியில்லை.. வலியவிளைக்கு எப்படிப் போறது இப்போ"
"தம்பனூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நிறைய பஸ் இருக்காம்.. இல்லாட்டி ஒரு டாக்சி பிடிச்சு வாங்கன்னு சொல்றான்.. டாக்சி பிடிச்சுப் போய்ரலாமா.. பஸ்னா லேட்டாகுமே.. இந்த ஊர் பஸ் எப்படி இருக்கும்னு வேற தெரியலை"
"நோ டிலே.. டாக்சிதான் சரியா இருக்கும்.. இவனைப் பிடிச்சாதான் நமக்கு பல குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும், முதல்ல கிளம்பற வழியைப் பார்ப்போம் வா"
இப்போது ஜார்ஜின் போன் சிணுங்கியது... பார்வதி!
"சொல்லு பாரு.."
"டேய்.. எங்க இருக்கீங்க.. சீக்கிரம் ரூமுக்கு வாங்க.. கெளதமி முழிச்சுட்டா.. "
"உள்ளேதான் வந்துட்டிருக்கோம்.. என்னாச்சு"
"முதல்ல இங்க வாங்க"
"வர்றோம் வர்றோம்"
பார்வதி ரூமுக்குப் போய் காலிங் பெல்லைத் தட்ட.. வந்து கதவைத் திறந்தாள்.
"ஜார்ஜ் பயங்கர குழப்பமா இருக்கு.. உள்ளே வாங்க முதல்ல"
"என்னாச்சு"
"அவ எந்திருச்சுட்டா.. நீயே கேளு இவ கிட்ட"
கெளதமி சேரில் அமர்ந்திருந்தாள்.. முகமெல்லாம் இறுகிப் போயிருந்தது.
"என்னாச்சு கெளதமி.. போன்ல பேசியது யாரு.. என்ன சொன்னாங்க"
பிரமை பிடித்தது போல காணப்பட்ட கெளதமிக்கு பேச்சே வரவில்லை. நிமிர்ந்து மெதுவாக ஜார்ஜைப் பார்த்தாள். கண்களில் நீர் தழும்பியது.. உதடுகள் விம்மினி.. குரல் மெல்ல வந்தது.
"நவீன் பேசினான்"
"WHAT????"
(தொடரும்)