"உணர்வுகள் முழுக்க நீ மட்டும்தான் இருக்க.. அதை என்னால தடுக்க முடியலையே".. (கெளதமியின் காதல் -11)
- சுதா. அறிவழகன்
கார் தாம்பரத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது.. கையில் பெரிய சைஸ் தேங்காய் பன்னை மொக்கியபடி பார்வதி உட்கார்ந்திருக்க.. அவளது தோளில் சாய்ந்தபடி கெளதமி.
"வேணுமாடி"
"என்னது?"
"பன்னுதான்"
"நவீன்தான் வேணும்"
"அது திருவனந்தபுரத்துல போய் வாங்கிக்கலாம்.. இப்போதைக்கு பன்னுதான் இருக்கு.. கொஞ்சம் சாப்பிடேன்.. வயித்துல ஒன்னும் இருக்காதே"
"எனக்கு சாப்பிட மூடு இல்லை.. அவனைப் பார்த்தாதான் நான் நார்மல் ஆவேன்"
"ஏய் உங்களுக்கு வேணுமாடா.. இந்தாங்க" .. கையில் இருந்த ஸ்னாக்ஸ் பாக்கெட்டை ஜார்ஜ், குமாரை நோக்கி தூக்கிப் போட்டாள் பார்வதி.. ஜார்ஜ் வாங்கிப் பிரித்து குமாரிடம் ஒன்றைக் கொடுத்து, தானும் ஒன்றைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான்.
"ஏன் கெளதமி.. நவீன் கடைசியா உன் கிட்ட என்ன பேசினான்.. ஞாபகம் இருக்கா"
"நான் இந்த உலகத்தை விட்டு திடீர்னு போயிட்டா என்ன பண்ணுவேன்னு கேட்டார்-ண்ணா.. அதுதான் கடைசியா பேசுனது"
"ஓ.. ஏதோ ஒரு விஷயத்தை அவன் நம்ம கிட்ட மறைச்சிருக்கான்னு எனக்குத் தோணுதும்மா.. something fishy.. உன் கிட்ட கூட அதை மறைச்சிருக்கான்னுதான் எனக்குத் தோணுது.. ஏதாவது பிரச்சினையில் சிக்கியிருக்கலாம்னு தோணுது. அதை யார் கிட்டயும் சொல்லாம தனக்குள்ள வச்சிருந்திருக்கலாம்"
"எனக்கும் இப்பத்தான் அது உறைக்குதுன்னா.. நான் தான் மக்கு போல இருந்திருக்கேன்"
"நீ எப்பவுமே அப்படிதானடி.. புதுசா என்ன ஞானோதயம்!"
"இல்லடி பாரு.. நிறைய தடவை என் கிட்ட பேசும்போதெல்லாம் திடீர் திடீர்னு அப்செட் ஆயிடுவார்.. திடீர்னு பின் டிராப் சைலன்ட்டாகிடுவார்.. நான் தட்டி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வருவேன்.. ஏதோ மனசுல வச்சிட்டே நம்ம கிட்ட பழகிருக்கார்.. அட்லீஸ்ட் என் கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல"
"பட்.. எங்க கிட்ட பேசும்போது இயல்பாதாம்மா இருந்தான். எங்களால அவன் கிட்ட எந்த வித்தியாசத்தையும் உணர முடியலையே"
ஆளுக்கு ஒரு பேச்சாக.. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள.. கார் வேகம் பிடித்து ஓடத் தொடங்கியிருந்தது. ஜன்னலோரம் சாய்ந்தபடி கெளதமி சாலையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.. அவளுக்குள் நினைவுகள் அலை மோதின.
ஒருமுறை கடலூருக்கு நவீனுடன் போன சம்பவம் நினைவுக்கு வந்தது. நவீனோட உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணம். நீயும் வா என்று கூப்பிட ஜாலியாக கிளம்பி விட்டாள் கெளதமி. கல்யாணத்துக்குப் போவதை விட நவீனுடன் டிரிப் போகப் போகிறோம் என்பது மட்டுமே அவளுக்குப் பெரிதாக தெரிந்தது. அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் சொர்க்கமாக கருதுபவள் அவள்.. அப்படிப்பட்டவளுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால் விடுவாளா என்ன..!
பஸ்ஸில்தான் போனார்கள்.. குழந்தை போல குதூகலித்தபடி நவீனுடன் கதையடித்தபடியே பயணித்தாள் கெளதமி.
"கெளதமி.. உனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு மூணு விஷயம் சொல்லேன்.. உடனே என் பேரையே மூணு தடவை சொல்லக் கூடாது"
"ஏன் திடீர்னு கேட்கறே நவீன்"
"சும்மாதான்.. சொல்லேன்"
"நவீன்.. நவீன்.. நவீன்.. இதுதான் எனக்குப் பிடிக்கும்.. நீ சொல்லாதேன்னு சொன்னாக் கூட அதையேதான் சொல்வேன்.. நீதான் எனக்குள்ள நிறைஞ்சிருக்க நவீன்.. மூணு இல்லை, முப்பது விஷயம் கேட்டா கூட அதுல குறைஞ்சது 30ம் நீயாதான் இருப்பே"
"சினிமாத்தனமா இருக்கே.. Cringe too பேபி"
"எது?"
"நீ இப்படிப் பேசறதுதான்"
"இதுல என்ன Cringe, சினிமாத்தனம்.. நான் மனசுல நினைக்கிறதைத்தானே சொன்னேன்.. நீதான் கேட்டே. அதான் சொன்னேன்.. எனக்கு நடிக்கத் தெரியாது நவீன்.. உணர்வதைத்தான் சொல்றேன்.. உணர்வுகள் முழுக்க நீ மட்டும்தான் இருக்க.. அதை என்னால தடுக்க முடியலையே"
"சேச்சே.. நான் குறை சொல்லலை.. ஏன் இப்படி என் மேல இவ்வளவு பக்தியா இருக்கே கெளதமி.. பல தடவை அதை நினைச்சுப் பார்த்து குழம்பிப் போயிருக்கேன்.. ஏன் பயம் கூட வரும்.. இந்த அளவுக்கு ஒரு உயிர் நம்ம மேல அன்பு வச்சிருக்குன்னா.. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் இருக்கனுமேன்னு எனக்கு பயம் வந்துரும். அம்மா கிட்ட கூட இதைப் பத்தி சொல்லிருக்கேன்"
"அம்மா கிட்டயா.. என்னைப் பத்தியா நவீன்.. அவங்க கிட்ட என்ன சொன்னே"
"ஆமா.. இப்படி லவ் பண்றாம்மா.. ரொம்ப பிரியம் காட்டறா.. எனக்குப் பயமா இருக்கும்மான்னு சொன்னப்ப, அவங்க சிரிச்சுக்கிட்டே.. அதுதாண்டா நேசம். அவ உன்னை தன்னோட உயிரா நினைக்கிறா.. இப்படிப்பட்ட அன்பெல்லாம் இப்ப எங்கடா கிடைக்குது.. நீ அதிர்ஷ்டசாலிடா.. அவளை விட்ராத.. கெட்டியா பிடிச்சுக்கோ.. அப்படின்னாங்க"
"அதானே பார்த்தேன்.. நல்லா பிடிச்சுக்கோப்பா.. விட்ராதே.. போனா வராது.. வந்தா நிக்காது.. சூப்பர் ஆஃபர்"
சொல்லி விட்டு கலகலவென அவள் சிரிக்க வழியெல்லாம் காதல் வாசத்துடன், இருவரின் சுவாசமும் கலக்க.. வாழ்க்கை, காதல், அது இது என்று நிறைய பேசிக் கொண்டே கடலூருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இந்த டிரிப்பில்தான் அவர்களது காதல் மேலும் இறுகிப் பிணைந்து உறுதியானது.
திடீரென ஒரு பெரிய சப்தம்.. கார் வேகமாக சடர்ன் பிரேக் போட்டு நிற்க.. நினைவு கலைந்து பதறியடித்து நிமிர்ந்தாள் கெளதமி. பக்கவாட்டில் ஒரு கார் வேகமாக ஓவர் டேக் செய்ததில் இவர்கள் சென்ற கார் நிலை தடுமாறி, டிரைவர் சுதாரித்து பிரேக் போட்டதால் வந்த குழப்பம்.
கெளதமிக்கு பயமாகி விட்டது. டிரைவரைப் பார்த்து, "அண்ணா மெதுவாப் போங்க அவசரம் இல்லை.. நானே ஏற்கனவே பதட்டத்துல இருக்கேன்ண்ணா" என்று சொல்ல, அவர் "நம்ம மேல தப்பு இல்லம்மா.. அவன் தான் தப்பான இடத்துல ஓவர்டேக் பண்ணிட்டான்" என்று சொல்லி வண்டியைக் கிளப்பினார்.
நாலு பேருக்குமே கூட உதறலாகி விட்டது. சற்று பிரேக் எடுக்கலாமா என்று யோசித்தபோது, பார்வதியே குறுக்கிட்டு, "டிரைவர் அண்ணா.. ஏதாவது காபி ஷாப்பில் நிறுத்துங்க.. ரிலாக்ஸ் பண்ணிட்டுப் போகலாம்" என்று கூறினாள்.. டிரைவரும் சற்று தொலைவில் வந்த ஒரு ரோட்சைட் கும்பகோணம் டிகிரி காபி ஹோட்டல் அருகே காரை நிறுத்தினார்.
காரை விட்டு கெளதமி இறங்கியபோது செல்போன் சிணுங்கியது... அப்பா!
"அப்பா.. சொல்லுங்கப்பா"
"எங்கம்மா இருக்கீங்க.."
"செங்கல்பட்டு நெருங்கிட்டோம்ப்பா.. டீ சாப்பிடலாமேன்னு இப்பத்தான் நிறுத்தினோம்.. என்னாச்சுப்பா"
"அப்படியா.. ஒரு முக்கியமான விஷயம்.. எனக்கு ஒரு போன் வந்துச்சு இப்போ"
"போனா.. எப்போப்பா.. யார்ட்ட இருந்துப்பா"
"நவீன்"
(தொடரும்)