"தம்பி.. நேரா நில்லு.. அசையாதே".. பள்ளிச் சிறார்களுக்கு இலவச யூனிபார்ம்.. அளவெடுப்பு தொடங்கியது!
Mar 30, 2024,04:49 PM IST
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா சீருடைக்கான அளவு எடுக்கும் பணியில் சிறப்பாக நடைபெற்றது.
படிக்காத மேதை, கர்மவீரர் காமராஜர் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்தவர். இவர் வழிகாட்டுதலின் படி வந்தது தான் குழந்தைகளின் மதிய உணவு திட்டம். அதன் பின்னர் தற்போது பள்ளிச் சிறார்கள் இடை நில்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகளை அரசு செய்து தருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, புத்தகம் நோட்டுகள், பேனா, போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவு மட்டுமல்லாமல் தற்போது காலை உணவும் கூட பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்களில் உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரர், சாதி, மதம், இனம், போன்ற பாகுபாடு இல்லாமல் மாணவர்கள் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வந்தது தான் சீருடை. இந்தத் திட்டத்தால் மாணவர்கள் இடையே ஒற்றுமை உணர்வு ஏற்படுகிறது. மாணவர்களின் மனதில் அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்பட்டு மன அமைதியுடன் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது.
இதன் காரணமாக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஒன்றிய அரசு பள்ளிகள், போன்ற அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி தற்போது தமிழக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கும் திட்டம் செயல்படுத்தபடுகிறது. இதில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு செட் இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலில் தமிழக அரசு ஒன்று முதல் ஐந்து வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணிகள் உள்ளிட்ட பலவகையான நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் பள்ளிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் அடுத்த வருடத்திற்கு குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்குவதற்காக, சீருடை அளவெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும் பணி நடைபெற்றது.