நீங்க ஃபுட்போர்டு விரும்பியா.. இனி எப்படி தொங்குவீங்க.. அரசு டிரைவரின் சூப்பர் ஐடியா!

Manjula Devi
Dec 26, 2023,06:31 PM IST

சென்னை: "நீங்க புட் போர்டிலையா தொங்குறீங்க.. நான் என்ன செய்கிறேன் பாருங்க".. என்று படிக்கட்டுகள் அருகே உள்ள ஜன்னல்களை அடைத்து .. இனி எப்படி தொங்குவீங்க என்று அசத்தலான ஒரு வேலையைப் பார்த்துள்ளார் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் டிரைவர் ஒருவர்.


எத்தனையோ பிரச்சினைகளை எளிதாக தீர்த்து விட முடிகிறது.. ஆனால் இந்த ஃபுட்போர்டு பயணத்தை மட்டும் இன்னும் நம்மால் தடுக்க முடியவில்லை. எத்தனையோ எச்சரிக்கை விடுத்தாலும், எத்தனையோ பேர் அடிபட்டு இறந்தாலும் கூட ஃபுட்போர்ட் அடிப்பதை பலரும் விடுவதில்லை.


2 மாதங்களுக்கு முன்பு ஃபுட் போர்டில் பயணித்த சக மாணவர்களை  நடிகையும், பாஜக பிரமுகருமான  ராஞ்சனா நாச்சியார் அடித்து கீழே இறக்கிய காட்சியையும் பலர் கண்டோம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வந்த நிலையில் நடிகை ராஞ்சனாவை போலீசார் கைது செய்தனர்.




இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு இருந்தபோது கீழே விழுந்து கால் நசுங்கியது.  அந்த மாணவனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். 


பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போது வரை ஃபுட்போர்டில் தொங்கும் பழக்கம் மாணவர்களிடம் ஃபேஷனாக தொன்று தொட்டு வருகிறது.  இதனால் பல்வேறு விபத்துகள் அரங்கேறிய போதும் மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடத்தான் செய்கின்றனர். ஃபுட்போர்டில்  பயணித்து விபத்து ஏற்படும் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் ஃபுட்போர்டில் பயணிக்காமல் இருக்க காவல்துறையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரத்தான் செய்கிறார்கள்.


இருந்தும் மாணவர்கள் இது போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகின்றனர். அவர்கள் சிறுவர்களாக இருப்பதால் பாவம் கண்டக்டர் என்ன செய்வார். சொல்லிப் பார்ப்பார் அல்லது திட்டுவார். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும். இளங்கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப மாணவர்கள் ஆபத்தை உணராமல் இதுபோன்று ஃபுட்போர்டில் பயணித்து வருகின்றனர்.




இந்த நிலையில்தான், என்ன சொன்னாலும் வேலைக்கு ஆகாது..  ஒரு பிரயோஜனமும் இல்லை. நாமளே செய்வதைச் செய்வோம் என்று வித்தியாசான ஒரு ஐடியாவை களம் இறக்கியுள்ளார் ஒரு அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர். பஸ்ஸின் இரு வாசல்களிலும் உள்ள இரு பக்க ஜன்னல்களில்தான் கம்பியைப் பிடித்தபடி ஃபுட்போர்ட் அடிக்கிறார்கள் மாணவர்கள். அந்த ஜன்னலையே மூடி விட்டால் என்ன என்பதுதான் இந்த டிரைவரின் ஐடியா.


அதன்படி இரு பக்க வாசல்கலிலும் படியை ஒட்டியுள்ள கம்பிப் பகுதி ஜன்னல்களை மறைத்து தகரத்தை வைத்து அடைத்துள்ளனர். இதனால் அந்த ஜன்னல்களின் கம்பியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த ஓட்டுநர் செயலுக்கு பலரும் தங்களின் ஆதரவுகளையும், பாராட்டுகளையும் ,

தெரிவித்து வருகின்றனர். இதுபோல எல்லா அரசு பேருந்துகளிலும் இந்த ஐடியாக்களை தமிழக அரசு பயன்படுத்தினால் மாணவர்கள் யாரும் ஃபுட்போர்டில் தொங்க மாட்டார்கள். விபத்து தவிர்க்கப்படும் என்றும்  வரவேற்பு கிளம்பியுள்ளது. 


ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. சற்று கை நீளமாக உள்ளவர்களால், அடுத்த ஜன்னலின் கம்பியை எளிதாக பிடிக்க முடியும். அப்படி பிடித்து தொங்கிக் கொண்டு போனால் இன்னும் அவர்களது வாழ்க்கை ரிஸ்க்கில் போய் முடிய வாய்ப்புள்ளது. எனவே படிக்கட்டுக்கு அருகே 2 அல்லது 3 ஜன்னல்களை கம்பிகளைப் பிடிக்க முடியாத அளவுக்கு கண்ணாடி ஜன்னல்களாக மாற்றி விட்டால் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்கும்.


இருந்தாலும், இப்போதைக்கு இந்த டிரைவரின் ஐடியாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கலாம்.. உங்களுக்கும் பிடிச்சிருந்தா நீங்களும் லைக் பண்ணுங்க பாஸ்!