Anna university: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த.. ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவு

Su.tha Arivalagan
Dec 28, 2024,06:49 PM IST

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் ஆர். என். உத்தரவிட்டுள்ளார். 


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சமீபத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச் செயல் தொடர்பாக ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான ஆர். என். ரவி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


பேராசிரியர்கள், மாணவர்களை அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:




சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுநர் இன்று மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியர்களுடன் உரையாடவும் நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார்.


இந்த ஆய்வின்போது  ஆளுநர் அவர்கள், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள  பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர், மாணவர்களுடன் (பெண்கள் மற்றும் ஆண்கள் தனித் தனியாக) கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமயாக கேட்டறிந்தார்.


பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 


அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும் மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்