குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.. டாக்டர் தமிழிசை கோரிக்கை

Su.tha Arivalagan
Sep 21, 2023,10:00 AM IST
புதுச்சேரி: மன அழுத்தத்தால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்கு பார்த்தாலும் இப்போது மன அழுத்தம், மன உளைச்சல் குறித்த பேச்சாகவே உள்ளது. யாரைப் பார்த்தாலும் எனக்கு டென்ஷனாக இருக்கிறது. டிப்ரசன் ஆக இருக்கிறது என்றுதான் அதிகம் புலம்புகிறார்கள்.



சமீபத்தில் நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவும் கூட மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மாணவர்களுக்கான திறன் அறிதல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.

டாக்டர் தமிழிசையின் பேச்சிலிருந்து: 

இன்று மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளின் திறமை தேடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆடல், பாடல், இசைக் கருவிகள், விஞ்ஞான செய்முறைகள் என்று இவ்வளவு திறமைகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய பேராக அமையும். 
அதனால்தான் மருத்துவக் கல்வியில் அவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு  பெரும் முயற்சி எடுத்தோம்.

குழந்தைகளிடம் கவனம் தேவை: குழந்தைகள்மீது கவனம் செலுத்துவதற்குக் காரணம் உண்டு. தமிழகத்தில் பிரபல இசை கலைஞரின் 16 வயது மகள் தற்கொலை செய்து கொண்டார். இது பெற்றோருக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அடிக்கடி நான் சொல்லுவதுண்டு குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும். குழந்தைகளை பட்டாம்பூச்சிகள் போல பறக்கவிட வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளை எச்சரிக்கையாக கையாள வேண்டும்.



உடல் நலம் போலவே மனநலமும் பாதிக்கப்படுகிறது. உடல் நலம் போல மனநலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். சமுதாயம் மாற வேண்டும். அதனால்தான் மத்திய அரசு மனநலம் சார்ந்த சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது. அனைவரும் குழந்தைகளின் திறமைகளை வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் அவர்களது திறமைகளைப் பாராட்ட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும். நேரம் செலவழிக்க முடியாத பெற்றோர்கள் உங்கள் அருகில் தான் இருக்கிறேன் என்ற உணர்வை குழந்தைகளுக்கு வெளிப்படுத்த வேண்டும். எல்லோரும் நமக்கு எல்லோரும் துணையாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளைக் கண்டறிவது தொடரும்.  அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து இன்னும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு பயிற்சி கொடுத்து கொண்டு வர முடியும். கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைப்பது போன்ற வகையில் ராஜ்நிவாஸ் உதவி செய்யலாம் என்றார் தமிழிசை செளந்தரராஜன்



பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆளுநர் தமிழிசை பதிலளிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை வந்து சந்தித்ததை புகார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 10 % இடஒதுக்கீடு அளித்ததற்கு, சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் காலடி வைத்ததற்கு, ஜி20 மாநாட்டிற்காக பாரதப் பிரதமரருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம். சில குறைகள் இருப்பதையும் கூறினார்கள். அதை எனது நிலையில் இருந்து, வரையறைக்கு உட்பட்டு கவனிப்பதாக சொல்லி இருக்கிறேன்.

33% இட ஒதுக்கீடு புரட்சிகர திட்டம்: மக்களுக்கான பல திட்டங்கள் சரியாக செய்யப்பட்டு வருகிறது. சிலருக்கு குறைபாடுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சட்டமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ளலாம் என்று நினைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி தரப்படுகிறது. பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படுகிறது.



பெண்களுக்கான 33 % ஒதுக்கீடு இன்று நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் இதை தீவிரமாக முன்னெடுத்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இப்போது நடைபெற்று இருக்கிறது. அதற்கு வரவேற்பு தெரிவிப்போம். அதற்காக பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நிச்சயமாக பெண்களின் வாழ்க்கையில ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றார் அவர்.