10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு: மாணவர்கள் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னை: 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடர்பான சந்தேகங்களை பெறவும், பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 -25 ஆம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்புக்கான அரசு பொது தேர்வுகள் இன்று தொடங்கி, மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் நாள் தமிழ் தேர்வு நடந்து முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21ஆயிரத்து 57 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 பொது தேர்வுகள் மார்ச் ஐந்தாம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர். அதேபோல், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4,113 தேர்வு மையங்களில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர்.
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்குள் டிஜிட்டல் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது எனவும், தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன முறைகேட்டில் ஈடுபட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான சந்தேகங்களை பெறவும், பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் உதவி எண்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, தேர்வு கட்டுப்பாட்டு அறை 94983-83075, 94983-83076 என்ற எண்களை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.