கிளர்ந்தெழுந்த எதிர்ப்பு.. கவுண்டம்பாளையம் பட ரிலீஸ் தள்ளிவைப்பு.. நடிகர் ரஞ்சித் பொறுமல்!

Manjula Devi
Jul 05, 2024,10:53 AM IST

கோயம்பத்தூர்:   கவுண்டம்பாளையம் படம் இன்று திரைக்கு வரவிருந்த நிலையில், படத்தைத் திரையிடக் கூடாது என்று சிலர் மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் நடிகரும் படத்தின் இயக்குநருமான ரஞ்சித்.


படத்தை திரையிட விடாமல் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இப்படத்தை விரைவில் வெளியிடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு கே எஸ் ராஜ்குமார் இயக்கத்தில், வெளிவந்த பொன் விலங்கு என்ற படத்தில்  நடிகராக அறிமுகமானவர்  ரஞ்சித்.  பின்னர் சிந்து நதி பூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.


மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர். தொடர்ந்து வில்லனாகவும் பல படங்களில் நடித்தார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை தயாரித்து, இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.




நீண்ட நாட்களாக பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், சமீபத்தில் சின்னத்திரையில் குதித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். 


ஸ்ரீ பாசத்தாய் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இது கலப்பு திருமணத்தையும் காதலையும் எதிர்ப்பதாக கதைக் களம் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பேட்டியின்போது ரஞ்சித் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆதிக்க சாதி வெறியை தூண்டுவது போல அவரது பேட்டி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில்தான் கவுண்டம்பாளையம் படம் இன்று வெளி வராது என்ற அறிவிப்பை ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.


கவுண்டம்பாளையம் படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இன்று திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது ஒத்திவைக்கப்பட்டதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவதாகவும் ரஞ்சித் கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இது குறித்து ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று திரைக்கு வர  இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது. ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன். இந்த படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருக்கிறது. நாடக காதலை பற்றியும் ,பெற்றோர்களின் வலியையும் மையமாக கொண்டு படத்தை  எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து  எதிர்ப்பு வருகிறது .


ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது.இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்.  சென்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன். இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும்  கடவுள் பார்த்து கொள்வார்.


நான் நேர்மையாகவும், உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன். நான் பொய் சொல்லவில்லை.  இந்த படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும் ,ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கிறார்கள். இந்த படம் இன்று வெளியிடப்படாது என்பதை வருத்தோடு தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.