ஆட்குறைப்பு விவகாரம்.. குழப்பமில்லாமல் கையாளவும்.. சுந்தர் பிச்சைக்கு கூகுள் ஊழியர்கள் மனு!
கலிபோர்னியா: ஆட்குறைப்பு விவகாரத்தை குழப்பமில்லாமல், சிறந்த முறையில் கையாள வேண்டும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபெட் நிறுவனத்தில் பணியாற்றும் கிட்டத்தட்ட 1400 ஊழியர்கள் இதுதொடர்பான மனு ஒன்றில் கையெழுத்திட்டு அதை சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ளனர். ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
12,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கோரிக்கை மனு சுந்தர் பிச்சைக்குப் போயுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில், புதிய வேலை நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். புதிதாக தற்போதைக்கு ஆட்களை எடுக்க வேண்டாம். கட்டாயமாக ஒருவரை வேலையை விட்டு நீக்குவதற்குப் பதில், விருப்ப ஓய்வு போன்ற திட்டத்தை அமல்படுத்தலாம்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை, காலியிடத்தில் பணியமர்த்த முன்னுரிமை தரலாம். விடுமுறையில் உள்ளவர்களை அந்த விடுமுறையிலிருந்து வந்த பிறகு வேலையிலிருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதுதவிர உக்ரைன் போன்ற போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வேலை பார்ப்போரின் வேலையைப் பறிக்காமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு வேலை போய் விட்டால் வேலை மட்டுமல்லாமல் வாழ்வாதாரத்தையும் சேர்த்து அவர்கள் இழக்க நேரிடும். மேலும் அவர்களது விசாவும் ரத்தாகும் சூழல் ஏற்படும்.
ஆல்பாபெட் ஆட்குறைப்பு நடவடிக்கையானது நிறுவனத்தின் மீது மட்டுமல்ல,உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதை மிகவும் சாதுரியமாக, புத்திசாலித்தனமாக, திறமையாக கையாள வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.