புரட்டி எடுக்கப் போகும்.. வடகிழக்குப் பருவமழை.. இன்று முதல் 3 நாட்கள்.. மிக கனமழைக்கு வாய்ப்பு!
- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. பிறகு மிதிலி புயல் உருவானது. இதனால் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டியது.
தற்போது மீண்டும் குமரிக்கடல் பகுதியில் காற்றின் சுழற்சி உருவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் 22 ,23 ,24 ,ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் சிறப்பான மழை பெய்துள்ளது. நடப்பு வட கிழக்கு சீசனில் இதுதான் முதல் பெரிய மழையாகும்.
சென்னையை பொருத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று மழை நிலவரம்:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை ,திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.