100 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை.. நம்ம அப்பத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்!
சென்னை: தங்கத்தின் விலை எங்கேயோ போய் விட்டது. வாங்குவதா அல்லது கடைக்குப் போய் வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பி வருவதா என்ற அளவுக்கு போய் விட்டது அதன் விலை. நம்முடைய பாட்டி காலத்தில் விற்ற விலையைப் பார்த்தால், அவர்கள் எல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
தங்கம் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குறைந்தபாடில்லை. இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 8075க்கும், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 8809க்கும் விற்கிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 64,600 ஆக உள்ளது. இந்த விலை உயர்வு சாதாரண மக்களை நிலை குலைய வைப்பதாக உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் விலை என்ன தெரியுமா.. ஜஸ்ட் 18 ரூபாய்தான் பாஸ்!
தங்கம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஆபரணமாக மட்டுமல்லாமல் அது குடும்பத்தின் சேமிப்பாகவும் உள்ளது. மிகச் சிறந்த முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில், இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள், அரசியல் சூழல்கள், சர்வதேச உடன்பாடுகள், வர்த்தகங்கள், மற்றும் உலகளாவிய நிகழ்வுகளின் தாக்கம் போன்றவை தங்கத்தின் விலையை பெரிதும் பாதித்துள்ளன. இக்கட்டுரையில், 1920களிலிருந்து தற்போது வரை இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வாறு மாற்றம் கண்டது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1920 முதல் 1947 வரை
பிரிட்டிஷ் ஆட்சியில் நாடு இருந்தது. 1920களில், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், பொருளாதாரம் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தது. அக்காலத்தில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ 18 முதல் 30 மட்டுமே. ஆனால், இரண்டாம் உலகப்போர் (1939-1945) மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, 1947ம் ஆண்டிற்குள் தங்கத்தின் விலை ரூ. 88 ஆக உயர்ந்தது.
1947 முதல் 1970 வரை
இந்தியா சுதந்திரமடைந்து விட்டது. இது தங்கத்தின் விலையிலும் கட மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபின், பொருளாதார கட்டமைப்பு வலுப்பெறத் தொடங்கியது. 1950களில், தங்கத்தின் விலை 100 முதல் ரூ 150 ஆக இருந்தது. ஆனால் அதன் பின்னர் 1962ல் இந்தியா-சீனா போர், 1965ல் இந்தியா-பாகிஸ்தான் போர் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. 1970க்குள், தங்கத்தின் விலை ரூ. 184 வரை உயர்ந்தது.
1971 முதல் 1990 வரை
1971ல் அமெரிக்கா பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால், உலகளவில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் தெரிந்தது. 1980களில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தபோது, தங்கத்தின் விலை ரூ. 1,320 - ரூ. 3,200 வரை உயர்ந்தது.
1991 முதல் 2000 வரை
இந்தியாவில் தாராளமயமாக்கம் தொடங்கிய கால கட்டம் இது. சர்வதேச நாடுகளுக்கு இந்தியா தனது சந்தையைத் திறந்து விட்டது. இதனால் மிகப் பெரிய அளவில் இந்தியாவை நோக்கி முதலீடுகள் வரத் தொடங்கின. இதனால் பொருளாதார வளர்ச்சி எட்டியது. ஆனால் அதே நேரத்தில், ரூபாயின் மதிப்பு சரிவடைந்து, தங்கத்தின் விலை ரூ. 3,466 (1991) முதல் ரூ 4,400 (2000) வரை உயர்ந்தது.
2001 முதல் 2010 வரை
2008ல் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. ரிசஷன் ஏற்பட்டது. இதன் விளைவாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் விளைவு தங்கத்தின் விலை உயர்வு கண்டது. 2010க்குள் தங்கம் விலை ரூ. 18,500 ஆக உயர்ந்தது.
2011 முதல் 2020 வரை
2011ல் தங்கத்தின் விலை இந்தியாவில் வரலாற்று உயர்வை எட்டியது அதாவது ஒரு சவரன் 26,400 ஆக உயர்ந்தது. ஆனால் 2015க்குள் இது சற்றே குறைந்து ரூ. 25,000 முதல் ரூ 28,000 என்ற அளவில் இருந்தது. 2020ல், வந்த COVID-19 பெருந்தொற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ததால், அதன் விலை ரூ 50,000 என்ற புதிய உச்சத்தை எட்டி மக்களை கதிகலங்க வைத்தது.
2021 முதல் 2025 வரை
2021-2024 ஆண்டு கால கட்டத்தில், உலக பொருளாதார சூழல், பல்வேறு போர்கள், மற்றும் பணவீக்க சூழ்நிலைகள் காரணமாக தங்கத்தின் விலை ரூ 50,000 என்பதிலிருந்து உயர்ந்து தற்போது ரூ. 60 ஆயிரத்தைத் தாண்டி வந்து நிற்கிறது.100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் வெறும் 18 ரூபாய்க்கு விற்ற நிலையில் இப்போது கனவிலும் காண முடியாத அளவுக்கு விலையில் வந்து நிற்பது மக்களை மலைக்க வைத்துள்ளது.
மாதச் சம்பளம் 1 லட்சம் வாங்குவோர் கூட தங்கத்தை வாங்க தற்போது தடுமாறும் நிலைதான் உள்ளது. அவர்களுக்கே இப்படி என்றால் மற்ற சாமானியர்களின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் அதன் விலை மேலும் உயரும் வாய்ப்புகளே அதிகம் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தங்கத்தின் மதிப்பை கவனத்துடன் கண்காணித்து முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.