அச்சச்சோ.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.520 உயர்வு!

Meenakshi
May 27, 2024,06:16 PM IST

சென்னை: கடந்த சில நாட்களில் ஏற்ற இறக்கங்கள் தங்கம் விலையில் அதிகமாக இருந்து வருகின்றன. கடந்த சனியன்று உயர்ந்த தங்கம் இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்கம் அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த 21ம் தேதி சவரனுக்கு ரூ.320தும், 22ம் தேதி மாற்றமின்றியும், 23ம் தேதி சவரனுக்கு ரூ.880தும், 24ம் தேதி சவரனுக்கு ரூ.800 என கடந்த 3 நாட்களில் தொடர்ந்து சவரனுக்கு ரூ.2000 குறைந்தது தங்கம். இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை அதிகளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த மகிழ்ச்சி நீடிக்க வாய்ப்பு இன்றி கடந்த சனிக்கிழமை அன்று மீண்டும் உயரத்தொடங்கியது.

இந்த விலை ஏற்றம் இன்றும் தொடர்ந்து சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.


இந்த விலை ஏற்றத்தால் வைகாசியில் விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்றம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.


இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,655 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 65 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.520 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,760 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,331 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,648 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 ஆக உள்ளது.


இன்றைய வெள்ளி விலை...


தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1.50 காசுகள் உயர்ந்து ரூ.97.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 780 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை   கடந்த சனியன்று ரூ.96,000 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1500 உயர்ந்து ரூ.97,500 விற்கப்படுகிறது.