இன்று நவராத்திரி 07ம் நாள்: அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Aadmika
Oct 09, 2024,10:10 AM IST

சென்னை :   2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 07 ம் நாள் அக்டோபர் 09 ம் தேதி வருகிறது. இது துர்க்கை மற்றும் மகாலட்சுமி வழிபாட்டினை நிறைவு செய்து, ஞானத்தை வழங்கும் கலைமகளை வழிபடுவதற்கான முதல் நாளாகும். நவராத்திரி வழிபாட்டின் இறுதி பகுதியை எட்டி வரும் வேளையில் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை சமாளித்து, கல்வி, கலைகள், பேச்சாற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றில் சிறப்பதற்காக சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள் நவராத்திரியின் ஏழாம் நாளாகும். 


நவராத்திரி 7ம் நாள் வழிபாடு :


அம்பிகையின் வடிவம் - சாம்பவி

கோலம் - சங்கு வடிவ கோலம் (மலர்களால் கோலம்)

மலர் - தாழம்பூ

இலை - தும்பை

நைவேத்தியம் - எலுமிச்சை சாதம்

சுண்டல் - கொண்டைக்கடலை சுண்டல்

பழம் - பேரீச்சம் பழம்

நிறம் - இளம் சிவப்பு


நவதுர்கை வழிபாட்டில் நவராத்திரியின் 7ம் நாளில் காலாராத்திரி தேவியை வழிபட வேண்டும். கருமை நிற தோற்றத்தில், கழுதை வாகனத்தில், உக்கிர வடிவில், பல விதமான ஆயுதங்களை கைகளில் ஏந்தி வரும் தேவியாக இவள் காட்சி தருகிறாள். இவள் காளியின் மறு வடிவமாக சொல்லப்படுகிறது. இந்த தேவியை நவராத்திரியின் 7ம் நாளில் சிவப்பு நிறத்தில் அலங்கரித்து, பாரிஜாத மலர்களால் அர்ச்சித்து, பால் கலந்து இனிப்புகள் அல்லது இனிப்பு உணவுகள் படைத்து வழிபட வேண்டும். பக்தர்களை தீய சக்திகள் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தேவியாக இவள் உள்ளாள். பாவங்கள், சாபங்கள், ஆபத்துக்கள், தடைகள் ஆகியவற்றை அகற்றி, பக்தர்களுக்கு அளவில்லாத நன்மைகளை வழங்கக் கூடியவள் இவள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்