புரட்டாசி மாதம் முடிஞ்சிருச்சு.. புதுக்கோட்டை சந்தையில்..ஆடு விற்பனை அமோகம்.. வியாபாரிகள் ஹேப்பி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையில், புரட்டாசி மாதம் நேற்று முடிவடைந்து, இன்று ஐப்பசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் ஆடு விற்பனை 2 கோடி ரூபாய்க்கு படுஜோராக வியாபாரம் நடந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். ரம்ஜான், பக்ரீத்,தீபாவளி, உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் இந்த ஆட்டுச் சந்தைகளில் சுற்றுவட்டாரத்திலிருந்து நிறைய ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதனால் இந்த சந்தையில் எப்போதுமே பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை படுஜோராக நடைபெறும். இதற்காக சில்லறை வியாபாரிகள் இந்த சந்தைகளில் ஏராளமானோர் ஒன்று கூடுவர்.
அந்த வரிசையில் இந்த வருடம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஆடுகளை வியாபாரிகள் முந்தி எடுத்துக்கொண்டு அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
இந்த சந்தையில் இன்று ஒரே நாளில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடைபெற்றுள்ளதாம். மேலும் இந்த சந்தைகளில் வரும் நாட்களிலும் இன்னும் ஆடு விற்பனை அதிகரிக்கும் எனவும், இறைச்சியின் விலை அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புது துணி வாங்குவது, பொருள்கள் வாங்குவது, பலகாரம் செய்வது என இப்போதிலிருந்தே பிஸியாகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு ஆட்டுக்கறி எவ்வளவு வாங்கலாம் என்ன சமைக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் ஆட்டு இறைச்சிகளின் விலை ஏற்கனவே கிலோ 900 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்