ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடு.. 26.85 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹேப்பி!
சென்னை: உலக முதலீடடாளர்கள் மாநாட்டின் மூலமாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன. மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 657 பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்று அந்த மாநாடு நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
முதல்வர் உரையிலிருந்து:
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் தமிழ்நாடு முதல்வர் பொறுப்பில் இருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த மாநாட்டை உலகமே வியக்கும வகையில் நடத்தி இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகளை ஈர்த்து என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டார் தம்பி டிஆர்பி ராஜா. தொழில்துறை அமைச்சர் பொறுப்பை எற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலய சாதனை செய்துள்ள ராஜாவை பாராட்டுகிறேன்.
இவ்விழாவில் கண்ணும் கருத்துமாய் இருந்த தலைமைச் செயலாளர் உல்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள், நன்றிகள். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் முதல் முகவரியே தமிழ்நாடு என்று மாற்றினோம். ஆட்சிக்கு வந்ததும், 1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80,600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நான் போனபோது 17321 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் 7441 கோடி முதலீடுகளைப் பெற்றோம். தொடர்ந்து முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன். அந்த வகையில் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளைத் திறந்து வைத்துள்ளேன். 7,47,757 இளைஞர்கள் மகளிருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன். இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். வரலாற்றில் நினைவு கூறப்படும்.
இந்த மாநாட்டின் தனித்துவமும் புதுமைத்துவமும் என்றென்றும் பேசப்படும். அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே அன்புக் கட்டளை போட்டேன். உலக அளவில் முதலீடுகளுக்கு ஏற்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த மாநாட்டை நடத்த முக்கியக் காரணமாக அதுவே இருக்க வேண்டும் என்று சொன்னேன். உங்களது பங்களிப்பு, எங்களது அயராத உழைப்பு காரணமாக இந்த மாநாட்டின்போது இறுதி செய்யப்பட்ட முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவாக வந்துள்ளது என்பதை இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இந்த மாநாட்டின் மூலமாக ரூ. 6,64,180 லட்சம் கோடி முதலீடுகள் வரப் பெற்றுள்ளன. மொத்தம் 26,85,657 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். நேரடியாக 14,54,712 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 12,30,945 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்
மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரி சக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள், மின் வாகனங்கள், வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்துள்ளன. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றி விடுவோம் என்ற பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அதை விரைவில் அடைய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெருமளவில் உதவியாக இருக்கும்.
தொலைநோக்கு பார்வையோடு தொழில்களுக்கான கொள்கைகளை வழிவகுத்து முன்னெடுத்துச் செல்வதுதான், மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். 20க்கும் மேற்பட்ட கொள்கைகளை வெளியிட்டு அந்தத் துறைகளில் உற்பத்தி மட்டுமல்லாமல் ஏற்றுமதியும் பெருக்கும் வகையில் முதலீடுகளை கணிசமாக ஈர்த்து, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை வெகுவாக அதிகரித்து வருகிறோம்.
புரிந்துணர்வு ஒப்பநத்ங்களை அமல்படுத்துவது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். அது தொடர்ந்து கண்காணித்து முழுமையான தொழிற்சாலையாக மாற்ற எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். எந்தத் தருணத்திலும் என்னிடம் தகவல் தெரிவிக்க விரும்பினால், தாராலமாக எனது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று முதல்வர் உரையில் தெரிவித்தார்.