142 பேர் டிஸ்மிஸ்.. மைக்ரோசாப்ட்டின் கிட்ஹப் கொடுத்த அதிர்ச்சிப் "பரிசு"!

Su.tha Arivalagan
Mar 30, 2023,03:02 PM IST
பெங்களூரு:  மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிட்ஹப் நிறுவனத்தின் இந்திய கிளைகளில் பணியாற்றி வந்த 142 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். என்ஜீனியரிங் பிரிவைச் சேர்ந்த அத்தனை பணியாளர்களையும் அந்த நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி அலுவலகங்களில் இவர்கள் பணியாற்றி வந்தனறர்.  நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடந்திருப்பதாக கிட்ஹப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



கடந்த பிப்ரவரி மாதம் இந்த சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நிறுவனத்தை சிறப்பாக நடத்த ஆட்குறைப்பு அவசியம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.  இந்தியாவில் ஒரு கோடி டெவலப்பர்களுக்கு கிட்ஹப் நிறுவனம் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி கிட்ஹப் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கி கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.